சென்னை:அமைச்சர் செந்தில்பாலாஜியின் (Minister V.Senthil Balaji) சகோதரர் வீட்டில் சோதனை செய்ய சென்றபோது, வருமான வரித்துறையினரை திமுக ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு தாக்கப்பட்ட விவகாரத்தில், 'திட்டமிட்டு வருமான வரித்துறையினரை திமுக ஆதரவாளர்கள் தாக்கியதாகவும், அதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும்' வருமான வரித்துறை இன்று (மே 27) தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, கோவை, கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக், அரசு ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, டாஸ்மாக்கில் நடைபெறும் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பலர் தொடர்ச்சியாக அதன் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதனடிப்படையில் இந்த சோதனையானது நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சோதனை மேற்கொள்வதற்காக சென்ற சில இடங்களில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுக ஆதரவாளர்கள் ஒன்று கூடி வருமான வரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக ஆதரவாளர்கள் சிலர் காயமடைந்தனர். முறையாக, போலீசாரை அழைக்காமல் வருமான வரித்துறை சோதனை நடத்த சென்றதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தெரிவித்திருந்தார்.