சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமைக் கட்சிக் தலைவர் வேல்முருகன் சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், ”மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குறியது.
முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் என்று குற்றம்சாட்டப்படுவது மக்கள் பிரச்னைகளை திசை திருப்பும் செயல். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை நடிகை காயத்ரி ரகுராம் அநாகரிகமாக வசைபாடுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்” எனக் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ”ஈழத்தமிழர்கள் படுகொலைக்குக் காரணமான, இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவை பிரதமர் மோடி இந்தியாவிற்கு அழைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவளிக்கும். நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல் தமிழ்நாட்டில் எந்த வெற்றிடமும் இல்லை. ரஜினி, கமல் சினிமாவில் இணைந்து நடிப்பது போல் அரசியலிலும் நடிக்கின்றனர்” எனவும் வேல்முருகன் தெரிவித்தார்.