சென்னை: கிண்டியில் உள்ள ராஜ் பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று காலை 11 மணி அளவில் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் என்று குற்றம்சாட்டி 97 பக்க புகார் மனுக்களை கொடுத்தார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கடந்த 2011 முதல் 2016ஆம் ஆண்டுவரை அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இந்த நான்கு வருட ஆட்சி காலத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் கரை படிந்துள்ளது. இது தொடர்பாக திமுக சார்பில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
முதலமைச்சர் பழனிச்சாமி மீது உலக வங்கி நிதி ஊழல், நெடுஞ்சாலை துறையில் நடைபெற்ற ஊழல், மத்திய அரசு கொடுக்கும் அரசியை வெளி சந்தையில் விற்று நடைபெற்ற மாபெரும் ஊழல், வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு ஊழல் என ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஏற்கனவே புகார் கொடுத்துள்ளேம்.
இதே போல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் நீதிமன்றமே ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியும் நடவடிக்கை இல்லை.