சென்னை:திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர் ”பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது மாணவர்களுக்கு எதிரானது.
புதிய கல்விக் கொள்கையை ஆர்எஸ்எஸ் காவி கொள்கையுடன் இணைத்து பாஜக அரசு உருவாக்கி உள்ளது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் என்பது இந்தியாவின் பன்முகத் தன்மைக்குச் சவாலாக அமையக்கூடிய தேர்தலாக இருக்கின்றது.
இந்தியா கூட்டணிக் கட்சிகளின், மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து ’யுனைடேட் ஸ்டுடென்ட்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். இதில் 14 மாணவர் அமைப்புகள் ஒன்று இணைந்து, ’தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம் பாஜகவை விலக்குவோம்’ என்கின்ற முழக்கத்தோடு, நாடாளுமன்றத்தை நோக்கி மிகப்பெரிய அளவில் மாணவரணி பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் வருகின்ற 12ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த பேரணியில், திமுக சார்பில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்வார்கள், இதில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சமாஜ்வாதி,ராஷ்ட்ரீய ஜனதா தளம், எஸ்எப்ஐ, விசிக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மாணவ அமைப்புகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.