அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு வருகின்ற கல்வி ஆண்டில், பிஇ தகவல் தொழில்நுட்பம் பாடப் பிரிவு மாணவர்களுக்கு தத்துவவியல் பாடத்தில் பகவத் கீதையை விருப்பப் பாடமாக சேர்த்து அண்ணா பல்கலை. அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து பகவத் கீதையை திணிக்க முயல்வது தொடர்பான விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பகவத் கீதை திணிப்பை எதிர்த்து திமுக மாணவரணியினர் ஆர்ப்பாட்டம் மேலும், இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறுகையில், ‘பகவத் கீதை கட்டாயப் பாடமாக அறிவிக்கப்படவில்லை. மாணவர்கள் விருப்பப்பட்டால், இதனை தேர்வு செய்து படித்துக் கொள்ளலாம்’ என விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், திமுக மாணவரணி சார்பில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகம் அருகே, பகவத் கீதை பாடத்தை நீக்கக்கோரி மாநில மாணவரணிச் செயலாளர் எழிலரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய எழிலரசன், ‘அண்ணா பல்கலைக்கழகம் பகவத் கீதையை பாடத் திட்டத்திலிருந்து நீக்க வேண்டும். தமிழ் தொன்மை மொழியான திருக்குறள் உள்ளபோது சமஸ்கிருதம் உள்ளிட்டவற்றை மறைமுகமாக மத்திய அரசு திணிக்க முயல்கிறது’ என்று குற்றஞ்சாட்டினார்.