சென்னை:திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு தும்மினால் ஆதரவு, இருமினால் வரவேற்பு என்று இரண்டு கைகளை, காலாக்கி நாட்டியமாடிக் கொண்டிருக்கிறார் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பதவி விரும்பி பாலகுருசாமி. தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தவர், நீட் தேர்வை ஆதரித்தவர், இந்தி திணிப்பை ஆதரித்தவர், இப்போது பல்கலைக் கழக துணை வேந்தர் தேர்விலும் மூக்கை நுழைத்து, மோடி அரசிற்கு தனது விசுவாசத்தை காண்பித்து, வயதான காலத்திலும் பதவி வெறி பிடித்து அலைகிறார் இந்த ஸ்வாமி.
இரண்டொரு நாட்களுக்கு முன்பாக அவர் வெளியிட்ட அறிக்கையொன்றில், ஆளுநர்கள் அல்லாமல் மாநில அரசே, துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும், கண்காணிக்கும் என்ற தமிழ்நாடு அரசின் இரண்டு மசோதாக்களை கடுமையாக தாக்கியிருக்கிறார் இந்த பதவி விரும்பி பாலகுருசாமி. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆட்டுத்தாடி ஆளுநர்கள், தமிழ்நாடு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர் யார்? என்பதை முடிவு செய்வார்களாம். அதை, தமிழ்நாட்டு மக்கள் கண்மூடி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்க வேண்டுமாம். ஆன்லைன் சூதாட்ட ஊழலிலேயே ஆளுநரின் முகத்திரை கிழிந்து தொங்கும் போது, இந்த ஆளுநர்கள் நேர்மையாக இருப்பார்களாம், அவர்கள் பல்கலைக் கழக துணை வேந்தர்களை மிக மிக நேர்மையாக தேர்ந்தெடுப்பார்களாம்.
தி.மு.க. அரசு இரண்டு மசோதாக்களை பல்கலைக் கழகங்களின் சுயாட்சியை நிர்ணயம் செய்வதற்காக நிறைவேற்றியது. பல்கலைக் கழக துணை வேந்தர் தேர்வு குழுவை முடிவு செய்வதையும், அந்த தேர்வுக் குழு இறுதி செய்து தரும் கல்வியாளர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை, சர்வாதிகாரி ஆளுநரிடம் இருக்கக் கூடாது என்றும், அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கே இருக்க வேண்டுமென்று அந்த மசோதாக்கள் உரக்கச் சொல்கின்றன.
மேலும், அந்த மசோதாக்கள் தமிழ்நாடு அரசின் நிதி உதவியால் இயங்கும், தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கே உண்டு என்பதை உறுதி செய்தன. இது பொறுக்காத பதவி விரும்பி பாலகுருசாமி, பல்கலைக் கழக மானியக் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் சென்றால், ஊழல் பெருகிவிடும், நாடு அழிந்துவிடும் என்று ஒப்பாரி வைக்கிறார். ஆளுநருக்கு, இந்த ஒட்டுத்தாடி பதவி விரும்பி பாலகுருசாமி ஆதரவு.
இந்த பதவி வெறி பாலகுருசாமியிடம், தி.மு.க. மாணவர் அணி கேட்க விரும்புவது ஒன்றுதான். பல்கலைக் கழக துணை வேந்தர்கௌல்லாம் லஞ்சம் கொடுத்துதான் பதவிக்கு வருவார்கள் என்றுச் சொன்னால், நீங்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக பதவியில் அமர்ந்த போது, எவ்வளவு லஞ்சம் கொடுத்து அமர்ந்தீர்கள் என்று சொல்ல முடியுமா? தமிழ்நாடு அரசின், திட்டக்குழு உறுப்பினராக நீங்கள் பதவி வகித்த போது, எவ்வளவு லஞ்சம் கொடுத்து பொறுப்பிற்கு வந்தீர்கள் என்று சொல்ல முடியுமா? லஞ்சம் கொடுத்துதான் பதவிக்கு வந்தீர்கள் என்றுச் சொன்னால், லஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்டு உடனே சிறைக்குச் செல்லுங்கள்.