தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உரிமைக்காக போராடினால் நடவடிக்கையா? - திமுக மாணவர் அணி கடும் கண்டனம்! - RN Ravi

சென்னை பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சார்பில் மாணவர்கள் போராட்டம் நடத்தக்கூடாது, அரசியலில் ஈடுபடக்கூடாது என உறுதிமொழி வாங்குவதற்கு அளிக்கப்பட்ட ஆவணம் சர்ச்சையாகி உள்ளது.

university of madras
சென்னை பல்கழைக்கழகம்

By

Published : Jul 27, 2023, 12:36 PM IST

சென்னை:சென்னை பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் பயிலும் மாணவர்கள் தங்களின் அடிப்படை வசதிக்காக குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சமூக வலைதளங்களில் பரவியது. மேலும், பல்வேறு பிரச்னைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டனர் என்றனர்.

குறிப்பாக, பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு செய்யப்படாமல் இருப்பதற்கு போதுமான நிதி ஆதாரமில்லை என்பதும் குற்றச்சாட்டாக உள்ளது. பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் மாநில அரசு வழங்காமல் உள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் போதுமான நிதி இல்லாமல் பற்றாக்குறை நிலவுவதால், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதி உள்ளிட்டவற்றிற்காக மாணவர்கள் போராடக்கூடாது என முதுகலை சமூகவியல் துறை இரண்டாம் ஆண்டில் படித்து வரும் மாணவர்களிடம் உறுதிமொழி படிவத்தில் பெற்றோர் மற்றும் மாணவர் கையொப்பமிட வேண்டும் என்று கேட்கப்பட்டது சர்ச்சையாகி உள்ளது.

இது தொடர்பாக திமுக மாணவர் அணிச் செயலாளர் சிவிஎம்பி எழிலரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தொன்மையும், பாரம்பரியமும் மிக்க சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இப் பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் முதுநிலை சமூகவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடமிருந்து, எந்தவொரு அமைப்புகளிலும் உறுப்பினர்களாக இணைந்து செயல்பட மாட்டேன் என்றும், எவ்வித போராட்டங்களிலும் ஈடுபட மாட்டேன் என்றும் உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட்டு தர வேண்டுமென்று பல்கலைக்கழகம் கேட்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

மேலும், மாணவர்கள் இந்த விதிமுறைகளை மீறினால், துறையின் தலைவரால் உடனே மாணவர்களை பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கப்படுவர் என்று படிவத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த பல்கலைக் கழகங்கள், பாடங்களை மட்டும் கற்றுக் கொடுக்கும் பயிற்சி கூடங்களாக மட்டும் இல்லாமல் சமூக நடத்தை, சமூக பொறுப்பு, அரசியல் புரிதல், பொது அறிவு சார்ந்த கல்வி, அடிப்படை சட்ட உரிமையை பற்றிய விழிப்புணர்வு உள்ளிட்டவைக்கான பயிற்சி பாசறையாக விளங்கிட வேண்டும். இளம் வயதில், அடக்கப்படும் நியாயமான உணர்வுகள், பல்வேறு வடிவங்களில், பிற்காலங்களில் வெளிப்படலாம் என்பது மனோதத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

மேலும், பல்கலைக்கழகங்கள், மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை, உரிமைகளை பற்றி நிர்வாகத்திடம் உரையாடவும், கருத்துகள் தெரிவிக்கவும், ஜனநாயக வழிமுறையை பின்பற்றி போராடிடவும் உரிமைக் கொண்டவர்கள் என உணர வழிவகுக்க வேண்டும். இச்சூழல் இல்லாமல், அடக்கப்பட்ட மனநிலையில், மறுக்கப்பட்ட உணர்வோடு வெளிவரும் இளம் தலைமுறையினர், பிற்காலங்களில் சமூகத்திடமோ அல்லது அரசிடமோ உரையாடி விவாதிக்க தெரியாதவர்களாக ஜனநாயக முறைப்படி போராடத் தெரியாதவர்களாக, உரிமையற்றவர்களாய் இருந்திடச் செய்யும். மாறாக, அடக்கி வைக்கப்பட்ட எரிமலையின் குழம்பைப் போல, முறையற்ற போராட்ட கலவரங்கள் ஏற்பட காரணமாக இளம் தலைமுறையினர் தள்ளப்படுகிறார்கள்.

இந்தியா என்னும் மாபெரும் ஜனநாயக நாட்டில் அரசியலமைப்பு சட்டம் வழங்கி இருக்கும் உரிமைகளை அறிந்தவர்களாய், புரிந்தவர்களாய், நியாயமான முறையில், ஜனநாயக வழிமுறைகளை கடைபிடித்து கேட்டுப் பெறக்கூடிய நிலையை இளைய தலைமுறையினருக்கு வழங்க வேண்டிய கடமை பல்கலைக்கழகங்களுக்கு உண்டு. ஆனால், தற்போது இந்தியா முழுவதும் மத்திய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து மாணவர்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் சூழ்ச்சியை பல்வேறு வகையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்கள் பின்பற்றி வருகின்றன.

இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றிருந்தும், மாணவர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து எந்த போராட்டமும் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. மாணவர் விரோத, மக்கள் விரோத, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக, மத்திய அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும், எதிர்க்கும் குடிமக்களாய், மாணவர்கள் உரையாடவோ, விவாதிக்கவோ, போராடவோ பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கவில்லை. அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது காவல்துறையை கொண்டும், குண்டர்களை கொண்டும் தாக்குதல்கள் நடைபெறுவதை நாடறியும்.

இத்தகைய போக்கு தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இதுநாள் வரையில் இருந்தது இல்லை.
ஆனால், தற்போது தமிழ்நாட்டின் ஆளுநர், பல்கலைக்கழகத்தின் அனைத்து செயல்பாட்டிலும் தலையிட தொடங்கி, தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை, மொழிக் கொள்கை, சமூகநீதி கொள்கை, மாணவர் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் ஆகியவற்றிற்கு எதிராக, திராவிட மண் ஏற்றுக் கொள்ளாத தேசிய கல்விக் கொள்கையையும், சனாதன சித்தாந்தங்களையும், கல்வி முறையையும், கொள்கைகளையும், தமிழ்நாட்டில் புகுத்திடும் பெரும் முயற்சியில் பல்கலைக் கழகத்திற்கெல்லாம் கட்டளையிட்டு, மாணவர் நலனில் அக்கறையின்றி செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

தற்போது, அதன் நீட்சியாக மாணவர்களிடம் போராட்டங்களில் பங்கேற்ற மாட்டேன், அரசியல் தொடர்புடைய அமைப்பு அல்லது எந்த அமைப்பிலும் இணைந்து செயல்பட மாட்டேன் என்று உறுதிமொழி படிவத்தில் தங்கள் பெற்றோருடன் இணைந்து கையெழுத்திட வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் கேட்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளை பறிக்கும் எந்த உறுதிமொழியையும் மாணவர்களிடமிருந்து பல்கலைக்கழகங்கள் பெற முற்படக்கூடாது என்று தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு ஆளுநர் நமக்காக பிரச்சாரம் செய்கிறார் - முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details