சென்னை அண்ணா அறிவாலயத்தின் மேலாளர் ஆர்.பத்மநாபன் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். இந்த திருமண நிகழ்வில் துரை முருகன், டி.ஆர்.பாலு, ஆர்காடு வீராச்சாமி உள்ளிட்ட திமுகவின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய ஸ்டாலின்," இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த பத்து நாட்களாக பத்திரிகைகளில் இது தான் செய்தியாக இருக்கிறது. மேலும், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதை மறைக்கத்தான், காஷ்மீர் விவகாரம், ப.சிதம்பரம் கைது போன்றவற்றை பாஜக அரசு செய்துகொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் முதலைமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் வெளிநாட்டிற்கு சுற்றுலாப் பயணம் போல் சென்றுள்ளனர். தற்போதைய அதிமுக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாக மாறி உள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2.7 லட்சம் கோடி ரூபாய், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை பெற்றிருக்கிறோம் என்றெல்லாம் செய்தி வெளியிட்டார்கள்.
ஆனால் அதில் எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது? எத்தனை நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்திருக்கிறார்கள்? என்பது குறித்த வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம். ஆனால் இதுநாள் வரையில் அதிமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை.
இவையெல்லாம் வெற்று அறிவிப்புகளாகவே மட்டுமே உள்ளது. நாடு இப்படி மோசமாக சென்று கொண்டிருக்கிறது. இதிலிருந்து தமிழ்நாட்டையும் அதையும் தாண்டி இந்தியாவை காப்பாற்றவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
திருமண விழாவில் பேசிய ஸ்டாலின் இப்படிப்பட்ட சூழலில் மக்களுக்கு திமுக பக்க பலமாக, உரிமையுடன் தட்டிக்கேட்கக் கூடிய பணியில் கலைஞரின் வழியில் திமுக பயணிக்கும் " என்று தெரிவித்தார்.