இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது, எடப்பாடி அதிமுக அரசின் சைபர் கிரைம் காவலர்கள், ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்திருப்பது முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் பாரபட்சமான வன்மம் நிறைந்த அணுகுமுறையையே காட்டுகிறது.
திருமாவளவன், ஐரோப்பிய பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் பங்கேற்று, தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், காலம் காலமாக என்ன கருத்துகளை எடுத்துச் சொல்லி, இந்த மண்ணில் விழிப்புணர்ச்சியை உருவாக்கினார்களோ, அந்த வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைத்திருக்கிறார். மக்கள்தொகையில் சரிபாதியாகவும் அதற்கும் கூடுதலாகவும் உள்ள பெண்களின் உரிமைகள் பல்லாண்டுகளாக மறுக்கப்பட்டு வந்ததை, சனாதன வருணாசிரம- மனுஸ்மிருதிகளை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார்.
இதைத்தான் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்தனர். அதுகுறித்து, திருமாவளவன் பேசியதை, திரித்துச் சொல்வதற்காக வெட்டி - சமூக வலைதளங்களில் பரப்பி, தமிழ்நாட்டில் வன்முறையைத் தூண்ட நினைக்கும் மதவெறி அரசியல் சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அதற்கு நேர்மாறாக தோழர் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. இந்தப் பொய் வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்துகிறேன்.