சென்னை கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பேரவைத் தலைவர் தனபால், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில், திமுக தலைவர் ஸ்டாலின், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 'நீட் தேர்வை ரத்து செய்' என்ற வாசகம் கொண்ட முகக்கவசம் அணிந்து வருகை தந்தனர்.
சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம், "மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் முன்னர் சபாநாயகரிடம் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கைவைக்கப்பட்டது.
இதற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தார். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்னும் இரண்டு நாள்கள்தான் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்ததுள்ளார். ஆனால், இதற்கான அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் துரைமுருகன் பங்கேற்று இரண்டு நாள்கள் போதாது என்று வலியுறுத்தினார். 15 மற்றும் 20 கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
நீட் தேர்வு பிரச்னை மாணவர்கள் தற்கொலை குறித்து பேச வேண்டும், புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் குறித்தும் புதிய கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்க வலியுறுத்தினோம்.
நீட் தேர்வில் அதிமுக நாடகம் நடத்திவருகிறது. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக கட்சி தேர்தல் அறிக்கையிலும், சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதிமுக எடப்பாடி பழனிசாமி ஆட்சி கூனிக்குறுகி அடிமை ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இரங்கல் தீர்மானத்துடன் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நிறைவு