சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ”உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு தொடர்ந்து மூன்று ஆண்டு காலமாக நடத்தாமல் உள்ளது. தற்போதும் ஏதாவது காரணங்களைக் கூறி யாராவது தேர்தலுக்கு தடை பெறுவார்காளா? என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது.
இதை நிரூபிக்கும் வகையில், உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக நீதிமன்றம் சென்றுள்ளதாக திட்டமிட்டு பொய்யான குற்றச்சாட்டை முதலமைச்சர் முதல் அக்கட்சியின் அமைச்சர்கள் வரை பரப்பி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக செய்த பல குழப்பங்களை தற்போது பட்டியலிடப் போகிறேன்.
- உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வார்டுகளை மறு வரையறை இதுவரை அதிமுக அரசு செய்யவில்லை.
- புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கும் வார்டு மறு வரையறை செய்யவில்லை.
- பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பட்டியல் இன மக்களுக்கான ஒதுக்கீடு செய்வதில் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட பஞ்சாயத்துக்கான ஒதுக்கீடும் இன்னும் செய்யப்படவில்லை.
- மேயர், மாநகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மறைமுகமாக தேர்வு செய்யப்படுவார்கள்.