தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் இருந்து மீண்டும் ஒரு கிங் மேக்கர்.. சாதிவாரி கணக்கெடுப்பே சரியான தீர்வு.. டி.கே.எஸ்.இளங்கோவன் சிறப்பு பேட்டி! - tks elangovan

சமுக நீதி மாநாடு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்த நிலையில், அண்ணாமலைக்கு சமூக நீதி என்றால் நகைச்சுவையாக தான் இருக்கும் என்று திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் எந்தெந்த சாதியினர் முன்னேறியுள்ளனர், பின்தங்கியுள்ளனர் என தெரியவரும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

DMK spoke person head TKS Elangovan said about caste wise survey social justice conference parliamentary election status
சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக நீதி மாநாடு, நாடாளுமன்ற தேர்தல் நிலை குறித்து திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்

By

Published : Apr 5, 2023, 10:52 AM IST

பாஜக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்படுகிறது என டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

சென்னை:அகில இந்தியச் சமூக நீதி கூட்டமைப்பின் முதல் தேசிய இணைய மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணெலிக் காட்சி வாயிலாக நேற்று கலந்துக் கொண்டு தலைமை உரையாற்றினார். மேலும் இந்த மாநாடு குறித்து பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுப்பப்பட்டது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் அகில இந்திய அரசியல் நகர்வு குறித்தும், இந்த மாநாட்டின் நோக்கம் குறித்தும் ஈடிவி பாரத்திற்கு திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே. எஸ்.இளங்கோவன் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான பாஜக அரசு:பாஜக ஆட்சி மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக உள்ளது. மேலும் பாஜக, இட ஒதுக்கீடு முறையை முழுமையாகப் பின்பற்றாமல் பல காரணங்களைச் சொல்லிப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை மறுக்கிறார்கள். ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் சேர்க்கை குறைவாகவே உள்ளது. இது போன்று இந்துக்களில் 90% பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. மீண்டும் கல்வி இல்லாதவர்களாக வேலைவாய்ப்பு இல்லாதவர்களாக மனுதர்மப்படி பிற ஜாதியினருக்கு பணியாற்றக்கூடியவராக மாற்றக்கூடியவராக நடவடிக்கையாக இது உள்ளது.

பல்வேறு அரசியல் கட்சிகள் மனித சமூகத்திற்கு ஆதரவாக இயங்கக்கூடிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஆளும் பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அகில இந்திய அளவில் சமூக நீதிக்கான மாநாடு நடைபெற்றது. இயல்பாகவே திமுக தான் சமூகநீதி கொள்கையை முன்னெடுத்துத் தொடங்கிய இயக்கம். முதல் முதலில் இட ஒதுக்கீட்டைச் சென்னை மாகாணத்தில் அன்றைய நீதிக் கட்சி அமல்படுத்தியது, அந்த வகையில் எங்களுக்குப் பொறுப்பும் கடமையும் அதிகம் உள்ளது.

வடக்கே மனு தர்மத்தினால் பல பேருக்குக் கல்வி, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது:சமூகநீதி கொள்கையை அன்றைய தினம் முதல் இன்றைய நாள் வரை விடாமல் பின்பற்றி வருகின்ற காரணத்தால் தான், அனைவருக்கும் வேலைவாய்ப்பு கல்வி கிடைக்கிறது. மேலும் வடக்கே மனு தர்மத்தின் படி சில நிலைகளை உருவாக்கி இருக்கும் காரணத்தால் பல பேருக்குக் கல்வி, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் வட மாநிலத்திலிருந்து தென் மாவட்டத்திற்கு வருகின்ற சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். வடக்கே இந்த சமூக நீதி பிரச்சாரத்தை மேற்கொண்டு அங்கேயும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வடநாட்டுத் தலைவர்கள் இந்த சமூக நீதி மாநாட்டில் பங்கேற்றனர். மேலும் இதற்காக வடநாட்டுத் தலைவர்கள் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம்:இந்த நாட்டில் பாஜக, பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையை மறைக்கிறது. மேலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் எந்தெந்த சாதியினர் முன்னேறி உள்ளனர், எந்தெந்த சாதியினர் பின்தங்கி உள்ளனர் என்பது குறித்துத் தெரியவரும்.
மேலும், மனித மலம் அள்ளும் அருந்ததியினர் சமூகத்திற்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு அன்றைய மறைந்த முதல்வர் கருணாநிதி வழங்கிய காரணத்தால், அந்த சமூகத்தில் தற்போது பொறியியல் பட்டதாரி மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், புறக்கணிக்கப்பட்ட சாதியினர் இன்றளவும் உள்ளனர். பின்தங்கிய சாதியினர் கண்டறியச் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். தமிழகத்தில் சுப.வீரபாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முக்கிய நோக்கம் என்பது இட ஒதுக்கீடு முறைப்படி, பள்ளி, கல்லூரிகளில், வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்டறியப் பயன்படுகிறது.

இதனைப் பதவிப் பொறுப்பில் உள்ளவர்கள், எதற்காகப் புரிந்து கொள்ள வேண்டும், எதற்காக இது தேவை என்று புரிந்து கொண்டால், தமிழ்நாடு செயல்பட்டதை போல் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த நாடு மதச்சார்பற்ற நாடு, மதம் சார்ந்த நாடு அல்ல, சமூக நீதி என்பது மனுதர்மத்தின் கேடு. சமூக நீதி, சம உரிமை, மனிதர்கள் அனைவரும் சமம். பிறப்பால் மனிதர்களை வேறுபடுத்துவது, இந்த அநியாயத்தை அகற்றிட, எல்லோரும் சேர்ந்து பாடுபட்டால், இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.

பாஜக அரசு பணக்காரர்களுக்கு பணியாற்றும் அரசாக உள்ளது:பாஜக ஆட்சியில் பிரதமர் மோடி அனைத்து மக்களின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவோம் எனத் தெரிவித்தார். ஆனால் என்ன ஆச்சுன்னு தெரியவில்லை. மேலும், தற்போது வரை 20 பணக்காரர்கள் வங்கியிலிருந்து ஏமாற்றிய 68 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்துள்ளது ஒன்றிய அரசு.

ஒன்றிய அரசு, ஏழைக்கான அரசாங்கமா? அல்லது பணக்காரருக்கான அரசாங்கமா? என்பதை எடுத்துக்காட்டும் நிகழ்வாக இது உள்ளது. பாஜக அரசு ஏழைகளைப் பற்றிக் கவலைப்படாமல் பணக்காரர்களுக்கு பணியாற்றும் அரசாக உள்ளது. 68,000 கோடி என்பது இந்திய மக்களின் சாதாரண, பாமர மக்களின் பணம் ஆகும்.

பாஜக, சமூக நீதியில் ஏமாற்றுகிறார்கள்:பாஜக, சமூக நீதியில் ஏமாற்றுகிறார்கள், பொருளாதாரத்தில் ஏமாற்றுகிறார்கள், வளர்ச்சியில் ஏமாற்றுகிறார்கள், உற்பத்தியில் ஏமாற்றுகிறார்கள், விவசாயத்தில் ஏமாற்ற நினைத்தார்கள் ஆனால் விவசாயிகளின் ஒரு வருடப் போராட்டத்தின் காரணமாக விவசாயிகளை ஏமாற்ற முடியவில்லை என அனைத்து தரப்பு மக்களுக்கு எதிராக இந்த அரசு இருக்கிறது.

ஸ்டாலின் கைகாட்டும் நபர் பிரதமராகத் தேர்வு: திமுகவைப் பொருத்தவரை ஒன்றிய அரசு நியமனம், குடியரசுத் தலைவர் நியமனம், என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கைகாட்டியவர்கள் பிரதமர், குடியரசுத் தலைவர் என பதவி வகித்தனர். திமுகவின் பார்வை அகில இந்தியப் பார்வை, அதேபோல் முதல்வர் ஸ்டாலினும் பின்பற்றுகிறார்.

நாட்டுக்கும் மக்களுக்கும் எது நல்லதோ அதை முன்னெடுத்துச் செல்லும்போது ஸ்டாலின் பேச்சை அனைவரும் விருப்பமாகக் கேட்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் கை காட்டும் நபர் பிரதமராகத் தேர்வு செய்யப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஒரு சில மாநிலக் கட்சிகள் அவர்களுடைய கொள்கையாகக் காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளை ஏற்றுக் கொள்வதில்லை என முடிவெடுத்து அதன்படி நடக்கிறார்கள், அது அவர்களுடைய உரிமை. ஆனால் நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், யார்? பெரிய எதிரி, அந்த எதிரி அப்புறப்படுத்த என்ன நடவடிக்கை? என்ன திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் வெற்றி என்பது சரியான திட்டமிடுதல் தான் தேர்தல் வெற்றி, பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் காங்கிரசைச் சேர்த்து வைத்து, கொண்டுதான் அது நடக்கும் என்பதை உணர்ந்துதான் முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்கிறார் எனத் தெரிவித்தார்.

அண்ணாமலைக்கு சமூக நீதி என்றால் நகைச்சுவையாகத் தான் இருக்கும்:அண்ணாமலைக்கு சமூக நீதி என்றால் நகைச்சுவையாகத் தான் இருக்கும். ஏனென்றால் அவர்கள் மனுதர்ம வாதிகள், ஒரு மனிதனைச் சூத்திரன், வைசியர், பார்ப்பனர், சத்ரியன் என பிரித்து வைத்து பார்க்காமல், அனைவரும் சமம் என்று பார்த்தால் அவருக்கு நகைச்சுவைக்காகத் தான் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டது போல பேசி வருகிறார் - அண்ணாமலை விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details