சென்னை:திமுக செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை எருக்கஞ்சேரி இந்திரா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் தமிழன் பிரசன்னா. இவர், வழக்கறிஞராகவும், திமுகவின் மாநில செய்தித் தொடர்பு இணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கு, நதியா(35) என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், இன்று வீட்டில் நதியாவின் அறை நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததால் கணவர் தமிழன் பிரசன்னா அறையை உடைத்து உள்ளே பார்த்தபோது, நதியா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. மேலும், இதுதொடர்பாக நதியாவின் தந்தையான ரவி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தமிழன் பிரசன்னாவிடம் விசாரணை நடத்தியபோது, தனது பிறந்த நாளை பிரமாண்டமான முறையில் கொண்டாடி முகநூலில் பதிவிட வேண்டும் என தனது மனைவி தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும்; அதற்கு, மறுப்புத் தெரிவித்ததால், நதியா தன்னிடம் சண்டை போட்டு நேற்றிரவு முதல் மன விரக்தியில் இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று காலை எழுந்து பார்த்தபோது அவர், தனது அறையில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:தூய்மை பணியாளர்களின் உயிர்களை பறித்த கோர விபத்து - சிசிடிவி காட்சி