தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Sivaji Krishnamurthy: குஷ்புவுக்கு எதிராக அவதூறு பேச்சு: திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது! - TN Governor RN Ravi

நடிகை குஷ்பு மற்றும் பெண்களுக்கு எதிரான அவதூறு பேச்சு காரணமாக திமுகவிலிருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 18, 2023, 8:43 PM IST

சென்னை:திமுகவின் தலைமை கழக பேச்சாளராக இருப்பவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவர் நேற்று முன்தினம் சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியபோது நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய வீடியோ பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், அந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்ட குஷ்பு, பெண்கள் குறித்து இவ்வளவு கேவலமாக பேசும் நிர்வாகிகள் திமுகவில் இருப்பதை கண்டு வேதனை அடைவதாகவும், இதுபோன்ற நபர்களை தலைமை வேடிக்கை பார்ப்பதாகவும் வேதனையுடன் பதிவிட்டிருந்தார். மேலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்ய வேண்டும்" என்றும் வலிறுத்தியிருந்தார்.

இதனிடையே, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்வதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் பின்னர், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், விசாரணைக்கு பின் கூடுதல் பிரிவின் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோன்று கடந்த ஜனவரி மாதமும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடைப்பேச்சை திமுக கட்சி தலைமை கண்டித்ததாகவும்,அது குறித்தும் காவல் நிலையத்திலும்,மகளிர் ஆனையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தற்போது மீண்டும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சைக்குரிய பேசிய நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ள நடிகை குஷ்பு சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இதற்கு முன்பு திமுகவில் இருந்த ஒருவர் என்னை இது போன்று பேசியதால் மகளிர் ஆணையத்தில் நான் உறுப்பினரே இல்லாத போது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்து டெல்லி வரைக்கும் சென்று என்னிடம் மன்னிப்பு கேட்டு எந்தப் பெண்ணைப் பற்றியும் நான் அவதூறாக பேசமாட்டேன் என்று எழுதிக் கொடுத்தார்.

பெண்களைப் பற்றி கேவலமாக இழிவாக பேசுவது தான் புது திராவிட மாடல் என்று நான் நினைத்துக் கொண்டேன். அதனால் இதைப் பற்றி பேச வேண்டாம் என்று நான் நினைத்தேன். ஆனால் ஒரு மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நான் இருக்கும் பொழுது என்னைப் பற்றி இவ்வளவு கேவலமாக பேசும் பொழுது போனால் போகுது என்று விட்டு விட்டால் நாட்டில் இருக்கும் மற்ற பெண்களை நினைத்துப் பார்க்க வேண்டும்" என்று ஆவேசமாக கூறியிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details