கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் மூலம் கொடுங்கையூர், ஆர்.கே. நகர் பகுதி மக்களுக்குப் பல உடல் உபாதைகள் ஏற்படுவதால், அதனை அகற்ற வேண்டும் எனத் தொடர் கோரிக்கைகள் எழுந்துவந்தன. இந்நிலையில் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகப் பகுதியை மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ. ராசா இன்று ஆய்வுசெய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே கொடுங்கையூர் குப்பைக் கிடங்குப் பிரச்சினை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் உரிய நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். அது கிடப்பில் இருக்கும்போதே ஆட்சி முடிந்துவிட்டது. வரக்கூடிய திமுக ஆட்சியில் கொடுங்கையூர் பிரச்சினை மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.
கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் குப்பை கொட்டுவது தொடர்பாக மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். மத்திய அரசிடம் இதற்கான பயோ மைனிங் (குப்பைகளைத் தரம்பிரித்தல்) திட்டங்கள் இருப்பதால், மத்திய அரசின் உதவியோடு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.