சென்னை:'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க கோரி, தமிழ்நாடு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 4 ஆவது நாளாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா நேற்று (டிச. 29) சென்னை தலைமை செயலகத்தில் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
4 நாளாகப் போராட்டம்:அந்த பேச்சுவார்த்தையில் தோல்வியடைந்ததை அடுத்து போராட்டத்தை 4 ஆவது நாளாக இன்றும் (டிச.30) தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களில் 103-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயக்கம் அடைந்தவர்கள் உடல் நிலை சரியான உடன் மீண்டும் போராட்ட களத்திற்கு வந்து உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
ஆசிரியைகள் தங்களின் குழந்தைகளையும் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியை விஜயசுமத்திரா கூறும்போது, 'சமவேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறோம்.
முதலமைச்சர் கவனம் தேவை:உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 100-க்கும் மேற்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று மீண்டும் திரும்பி போராட்டக்களத்திற்கு வந்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமவேலைக்கு சம ஊதியம் எப்போது வழங்குவார் என்பதை தெரிவிக்க வேண்டும். புத்தாண்டு வரும்போது இதனை அறிவித்தால், நாங்களும் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். இல்லாவிட்டால் அறிவிக்கும் வரையில் தொடர்ந்து போராடுவோம்' எனத் தெரிவித்தார்.