கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுகவின் இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பில், நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பட்டியலினத்தவருக்கு எதிராகப் பேசியது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவியது.
இதுதொடர்பாக ஆதி தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஆர்.எஸ். பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்ட ஆர்.எஸ். பாரதிக்குத் தேவைப்பட்டால் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டுமென்ற நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு மீதான விசாரணை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
ஏற்கனவே நீதிமன்றம் இந்த வழக்கில், தலைவர்கள் இதுபோன்ற சொற்களை பொதுவெளியில் பேசினால் மக்கள் மத்தியில் நீதித் துறை மீது எந்த மாதிரியான எண்ணத்தை ஏற்படுத்தும் என்பதை யோசித்துப் பார்க்குமாறு எடுத்துரைத்திருந்தது.
அதேபோல, ஆர்.எஸ். பாரதியின் பேச்சு யார் வேண்டுமானலும், சிபாரிசு இருந்தால் நீதிபதி ஆகிவிடலாம் என்பதைப்போல் உள்ளதாகவும், இத்தகைய பேச்சுகள் மக்களுக்கு நீதித் துறையில் மீதுள்ள மாண்பை சீர்குலைத்துவிடும் எனவும் வருத்தம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தன் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கை ரத்துசெய்ய கோரி ஆர்.எஸ். பாரதி தாக்கல்செய்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று (பிப். 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ். பாரதி தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், திராவிட இயக்கத்தின் சிறப்புகளையும், இயக்கத்தின் பயனாய் கிடைத்தவற்றைப் பட்டயலிடவே அவ்வாறு பேசப்பட்டதாகவும், நீதிபதிகள் நியமனத்தைப் பற்றி மட்டுமல்லாது மற்ற துறைகளைப் பற்றியும் பேசியிருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் குடியரசுத் தலைவரைக்கூட பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுத்தது தொடங்கி இப்படி பலவற்றைப் பற்றிய மேற்கோளில் நீதிபதிகள் நியமனம் குறித்த கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், அவமதிக்கும் நோக்கத்தோடு பேசப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி சதீஷ்குமார், இது சரியான கூற்றா? இது அவமானப்படுத்துவது ஆகாதா? திராவிட இயக்கம் இல்லாவிடில் அவர்கள் சுயமாக மேல் வந்திருக்கவே முடியாதா? உங்கள் பிச்சையில்தான் எல்லோரும் நீதிபதி ஆனார்களா? சட்டம் இயற்றும் இடத்தில் இருப்பவர், அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பவர் இப்படி பேசுவது ஏற்புடையதா? சமீப காலங்களில் அரசியலில் அறிவுப்பூர்வமான கருத்து பரிமாற்றம் குறைந்துவருகிறதென வருத்தம் தெரிவித்தார்.
காவல் துறை தரப்பில் முன்னிலையான மாநிலத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ஏ. நடராஜன், பட்டியலின பழங்குடி மக்கள் யாருக்குமே திறமையே இல்லை என்பது போலவும், அவர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்றால் அது திமுக போட்ட பிச்சை என்பதுபோல ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பதாகவும், இவரின் பேச்சு ஒட்டுமொத்தமாக அந்த சமுதாய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஏராளமான சமுதாய தலைவர்களும் இத்தகைய பேச்சுக்காக கண்டனம் தெரிவித்துள்ளதாகவும், வெறுப்புணர்வையும், பகையுணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தப் பேச்சின் காணொலி ஆதாரங்கள், சாட்சிகள் உள்ளதாகவும், வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் மனுதாரர் வழக்கை எதிர்கொள்ள வேண்டுமென தற்போதைய நிலையில் வழக்கை ரத்துசெய்யுமாறு கோர முடியாதென வாதிட்டார்.
புகார்தாரர் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் ராகவாச்சாரி, ஆர்.எஸ். பாரதியின் பேச்சு மனுதாரர் உள்பட அச்சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரையும் புண்படுத்தும் வகையில் உள்ளதால், அவர் மீதான வழக்கை ரத்துசெய்யக் கூடாதென வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: 'திமுக ஆட்சிக்கு வந்தால் விழித்திறன இழந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' ஆர்.எஸ் பாரதி!