செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ். பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, "பொன்னான நேரத்தை வீணடிக்கும் வகையில் காலையில் ஒரு நாடகம் அரங்கேறியுள்ளது. அண்ணாமலை ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட தெரிவிக்கவில்லை. 1972ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் கொடுத்த ஊழல் குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் பதில் அளிக்கும் முன், அந்த குற்றச்சாட்டுகளைப் பார்த்தேன், படித்தேன், ரசித்தேன் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.
பொதுவாக இன்று சாலமன் பாப்பையா பட்டிமன்றம் பார்ப்பேன். அதில் உள்ள நகைச்சுவையைப் பார்த்து சிரிப்பேன். அதுபோலத்தான் இன்று அண்ணாமலை குற்றச்சாட்டுகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. அவர் எப்படி ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தார் என்று தெரியவில்லை. சம்மந்தப்பட்ட நபர்கள் அண்ணாமலை மீது புகார் அளிப்பார்கள். மேலும் சம்மந்தம் இல்லாத நபர்கள் சொத்துக்களை எல்லாம் சேர்த்துள்ளார். ரூ.1,408 கோடி சொத்தை 15 நாட்களுக்குள் அண்ணா அறிவாலயத்தில் அண்ணாமலை ஒப்படைக்க வேண்டும்.
அண்ணாமலை மீது சம்பந்தப்பட்டவர்கள் வழக்குத் தொடர்ந்தால் அண்ணாமலை தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளமாட்டார். நீதிமன்றங்களுக்கு செல்லத்தான் நேரம் அதிகமாக இருக்கும். ரஃபேல் வாட்ச்சிற்குப் பில் கொடுக்காமல் அண்ணாமலை, ஒரு பொய் சீட்டை காட்டி, சீட்டிங் செய்துள்ளார்.
அண்ணாமலைக்கு அவர் மூளை கூட அவருக்கு சொந்தம் இல்லையா என்று பொதுமக்கள் கேட்கின்றனர். அண்ணாமலைக்கு பொதுமக்கள் மக்கு மலை எனப் பெயர் வைத்துள்ளனர். இந்த மக்கு போல உள்ள இவர் தலைவராக இருந்தால் மட்டுமே எங்களுக்கு நல்லது. எனவே, அவரை மாற்றம் செய்யக் கூடாது என தேசிய பாஜகவிற்கு கோரிக்கை வைக்கிறேன். திமுகவைப் பொறுத்தவரை நாங்கள் எதற்கும் பயந்தவர்கள் இல்லை.
ஆருத்ரா வழக்கில் நிச்சயம் அவர் ஜெயிலுக்குச் செல்வார். இதை நான் கூறவில்லை. அந்த கட்சியில் இருந்து வந்த சரவணன் தெரிவித்துள்ளார். சிபிஐ-யை கண்டு நாங்கள் பயப்படவில்லை. சிபிஐ அவர்கள் கையில் தான் உள்ளது. அதை வைத்து அவர் பயமுறுத்த பார்த்தால் நாங்கள் பயப்பட மாட்டோம்.
சிபிஐ பதிவு செய்த எத்தனை வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது?. அண்ணாமலை திமுக மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு நிச்சயம் வழக்குப்பதிவு செய்வோம். மற்ற நபர்கள் அவர்கள் குற்றச்சாட்டு குறித்து பதில் அளிப்பார்கள். 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் பாஜக ஆட்சி உள்ளது. எனவே, தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும், நாங்கள் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி கிடையாது பயப்பட. நாங்கள் கண்டிப்பாக வழக்கு தொடர்வோம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க:"இது தாங்க ரஃபேல் வாட்ச் பில்; ரூ.3 லட்சத்துக்கு வாங்கினேன்" ஆதாரம் காட்டிய அண்ணாமலை!