சென்னை:திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, '10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கை வருத்தமளிக்கிறது. 10 சதவீத இட ஒதுக்கீடுச்சட்டம் 2019ஆம் ஆண்டு தான், பாஜக அரசு நாடாளுமன்றத்தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக அவசர அவசரமாக கொண்டு வந்தது.
மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வந்தபோது 10% இட ஒதுக்கீட்டை திமுக கடுமையாக எதிர்த்தது. அப்போது அதிமுகவினர் வெளிநடப்பு செய்துவிட்டார்கள். அதிமுக அன்று எதிர்த்திருந்தால் சட்டம் நிறைவேறி இருக்காது. திமுக தான் சட்டத்தைக்கொண்டு வந்தது போன்று தவறான கருத்தை ஜெயக்குமார் சொல்கிறார். 10% இட ஒதுக்கீடு தொடர்பாக ஆளும் கட்சியாக இருந்த அதிமுக அப்போது அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்?. இட ஒதுக்கீட்டுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் திமுக; சமூகநீதி தான் முக்கியம் என்று சட்டத்தை திமுக எதிர்த்தது.
மத்திய ஆட்சியில் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் நிறைவேற்றி இருந்தால்கூட நாங்கள் எதிர்த்து இருப்போம். நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட நேரத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி நீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு வராமல் பார்த்துக்கொண்டார். எனவே, கூட்டணி என்பது வேறு,கொள்கை என்பது வேறு.