தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளியானது சிஏஜி அறிக்கை: நெருக்கடியில் அதிமுக!

ஏற்கெனவே உள்கட்சி குழப்பத்தால் சிக்கித் தவிக்கும் அதிமுகவிற்கு புதிய தலை வலியாக ஒன்றிய கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General) குழு சமர்ப்பித்த அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல்கள் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

வெளியானது சிஏஜி அறிக்கை
வெளியானது சிஏஜி அறிக்கை

By

Published : Jun 29, 2021, 12:44 PM IST

சென்னை:திமுக ஆட்சிக்கு வந்த உடன் நிர்வாகத்தைச் சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

முக்கியப் பொறுப்புகளில் நிர்வாகத் திறமை வாய்ந்த அலுவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தைச் சீரமைக்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்றிய கணக்குத் தணிக்கையாளர் குழுவின் அறிக்கை கடந்த 2017-18ஆம் ஆண்டு அப்போதைய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போதைய அதிமுக அரசின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, கோப்பிற்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டது.

சிஏஜி அறிக்கையும், அதிமுகவின் நெருக்கடியும்:

சில ஆண்டுகளாக ஒன்றிய தணிக்கையாளர் குழு அறிக்கை வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போதைய திமுக அரசு ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று, உடனடியாக சட்டப்பேரவையில் சிஏஜி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி பொறுப்பிலிருந்து வரும் நிலையில் சிஏஜி அறிக்கை வெளியிட அதிமுக ஆர்வம் காட்டவில்லை.

தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், சட்டபேரவைத் தேர்தல் நடைபெற்றதால் அதிமுகவின் வெற்றிக்கு இது தடையாக இருக்கும் என்பதால் நிலுவையில் வைக்கப்பட்டது.

தற்போதைய அரசு பழைய ஆட்சியில் நடைபெற்ற திட்டங்களில் நடந்த ஊழல்களை தூசித் தட்ட ஆரம்பித்து இருக்கிறது.

குறிப்பாக லஞ்ச ஒழிப்புத் துறை டிஐஜி-யாக கந்தசாமி பொறுப்பேற்றபின், சில தினங்களுக்கு முன் முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

சிஏஜி அறிக்கை

சிஏஜி அறிக்கை முக்கிய அம்சங்கள்:

  • முறையற்ற நிர்வாக சீர்கேட்டால் அரசுக்கு ரூ.30ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
  • மின்சாரத்துறையில் 13ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
  • பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாடநூல் கழகத்தின் தொகை கோரிக்கையை சரிபார்க்கத் தவறியதால் 23 கோடியே 27 லட்சம் ரூபாய் இழப்பு நிகழ்ந்துள்ளது.
  • ஆட்சியின் மூலம் சரியான நிர்வாகமின்மையினால் அரசுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அரசுக்கு ஏற்பட்ட இழப்பு:

அதிகபட்சமாக அரசுக்கு மின்துறை சார்பில் 13ஆயிரத்து 176 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2018-19ஆம் ஆண்டில் வருவாய் ரூ. 2,533.90 கோடி ஆக அதிகரித்தாலும், கூடுதல் செலவு ரூ.7,396.54 கோடி அதிகரித்துள்ளது.

உதய் திட்டத்தில் கையெழுத்திட்ட பிறகு, 2018-19ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு ரூ.9,126 கோடி உதவித் தொகையைப் பெற்றது.

அரசுக்கு ஏற்பட்ட இழப்பு

ஆனாலும், செயல்பாட்டு அளவுகளை எட்டாததாலும், மின் கட்டணத்தை உயர்த்தாததாலும் எதிர்பார்க்கப்பட்ட நிதி மாற்றங்களை அடைய முடியவில்லை எனவும் தெரிகிறது.

'கோல் இந்தியா' என்ற நிலக்கரி நிறுவனம் மூலம் நிலக்கரி கொள்முதல் செய்யப்படுகிறது.

2014-19ஆம் ஆண்டுகளில் 106.97 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியை டான்ஜெட்கோ பெற்றிருக்க வேண்டும். ஆனால், 71.82 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியை மட்டுமே கொள்முதல் செய்ய முடிந்தது.

இதற்காக 'கோல் இந்தியா' நிறுவனதிற்கு டான்ஜெட்கோ அபராதம் விதிக்கவில்லை.

ஆனால், நிலக்கரியை இறக்கி வைக்க தனியார் நிலக்கரி முனையத்தை பயன்படுத்திய வகையில் ரூ.41.68 கோடி தவிர்க்கக் கூடிய செலவு ஏற்பட்டது. வடசென்னையிலிருந்து மேட்டூருக்கு நிலக்கரியை ரயில் மூலம் அனுப்பும்போது 47 மாதங்களில் நிர்ணயிக்கப்பட்ட இழப்புக்கு அதிகமாக, நிலக்கரி இழப்பு ஏற்பட்டதால் டான்ஜெட்கோ நிறுவனத்திற்கு ரூ.58.37 கோடி இழப்பு ஏற்பட்டது.

நிலக்கரி இழப்பு

மருத்துவமனைகளில் ஏற்பட்ட இழப்பு:

சென்னை மாநகராட்சியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டத்தால் 72 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டது.
வாகன விதிகளை சுட்டிக்காட்ட அரசுப் போதிய கவனம் செலுத்தவில்லை. மற்ற மாநிலங்களில் அதிக அபாரதத் தொகை இருக்கும்போது விதிகள் தளர்வால் நாட்டிலேயே அதிக விபத்துகள் நடக்கிறது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.

பேரிடர் மீட்பு மென்பொருள்கள் ரூ.2.62 கோடி உபகரணங்கள் உபயோகிக்காமலேயே வீணாக்கியதால் இழப்பு நிகழ்ந்துள்ளது.

திட்ட அனுமதியின்றி கூடுதல் கட்டடங்களைக் கட்டியதால் அரசுக்கு ரூ.66.94 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஏழு, மாதிரி மருத்துவக் கல்லூரிகளுக்கு உரிய முறையில் கவனமின்றி கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள் பயன்படுத்தப்படவில்லை. இதனால் அரசிற்கு ரூ.4.29 கோடி இழப்பு.

சென்னைப் பல்கலைக்கழக புதிய கட்டட விடுதி பயன்படுத்தத் தவறியதால் ரூ.10.10 கோடி பயனற்ற செலவால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

ESI மருத்துவமனைகளுக்கு இரண்டு ஆயுர்வேத மருத்து கொள்முதல் செய்ததால் அரசுக்கு ரூ. 2.67 கோடி இழப்பாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அனுமதி பெறாமல் அமைத்த குடிநீர் குழாய்களால் ரூ. 2.42 கோடி செலவு ஏற்பட்டது.

பொது நூலகங்களில் மின்னணு சாதனங்களுக்கான ஒப்பந்தத்தில் ரூ.5.12 கோடி இழப்பாகியுள்ளது.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய நிதியில் ரூ.44.24 கோடி அரசு கட்டடங்கள் கட்டப்பயன்படுத்தியது. ரூ.3.24 கோடியில் அமைக்கப்பட்ட ஹாக்கி விளையாட்டு புல்தரைகள் பயன்படுத்தப்படவில்லை.

சொத்து வரி தவறான மதிப்பீட்டால் ரூ.40.02 வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்று பல்வேறு வகைகளில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருங்கும் உள்ளாட்சி தேர்தல்:

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் உள்பட பேரூராட்சி, நகராட்சிகளில் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், திமுக வெளியிட்டுள்ள தணிக்கையாளர் குழு அறிக்கை அதிமுகவை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி, 'அரசின் தேவைகளுக்காக தான் மின்சாரம் வெளியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. மின்துறையில் எந்தவிதமான ஊழலும் நடைபெறவில்லை' என மறுத்துள்ளார்.

முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி

திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டைன் ரவீந்திரன் கூறுகையில், 'வெளிப்படை தன்மை உடைய அரசு என்பதால் உடனடியாக அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. எந்தவிதமான அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது' எனத் தெரிவித்துள்ளார்.

அரசின் திட்டங்கள் குறித்து தணிக்கையாளர் குழுவே அறிக்கையை சமர்ப்பித்திருப்பதால், நீதிமன்றத்தை நாடினாலும் பலன் அளிக்குமா என்பது தெரியவில்லை.

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில் எதிர்க்கட்சியான அதிமுகவின் நகர்வைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: யார் ஆட்சியில் கரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது: பேரவையில் காரசார விவாதம்!

ABOUT THE AUTHOR

...view details