தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 31, 2022, 7:30 PM IST

ETV Bharat / state

கூட்டணி இல்லாமல் போட்டியிட தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்!

கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் சவால் விடுத்துள்ளார்.

கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்
கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்

சென்னை: அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த முதலமைச்சர் ஸ்டாலின்,"தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக தனித்து நின்றால், அவர்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருவதைப் போல் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்படுகிறது" எனக் கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த கருத்து தேசிய அளவிலான அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஏன் என்றால் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் சமீபத்தில்,"பாஜக ராட்சசன் போல் வளர்ந்து வருகிறது" என கூறியிருந்த நிலையில் ஸ்டாலினின் இந்த கருத்து முக்கியமாகக் கருதப்பட்டது.

சமீபகாலமாக பாஜகவுடன் திமுக ஒரு மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறது என்ற விமர்சனம் எழுந்தது. குறிப்பாக திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது அரசு நிகழ்ச்சிக்காகத் தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடிக்குக் கருப்பு கொடி காட்டுவது, மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவது போன்ற செயல்களில் திமுக ஈடுபட்டது.

ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஒரு சில விவகாரங்களில் பாஜகவுடன் திமுக மென்மையான போக்கை கடைப்பிடித்தது. குறிப்பாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக வருகை தந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போதே பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என பேசப்பட்டது.

2001ஆம் அண்டு திமுக தோளிலும், 2021ஆம் ஆண்டு அதிமுகவின் தோளிலும் சவாரி செய்தே தன் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக பெற்றுள்ளது" என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்,"எந்த காலத்திலும் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்காது. இதை விசிகவின் தலைவர் திருமாவளவனுக்கு நான் உறுதியாகக் கூறுகிறேன்" எனக் கூறியிருந்தார்.

ஆனாலும், ஒரு வேளை 2024-ல் பாஜக தனிப் பெரும்பான்மைக்குக் குறைவான இடங்கள் இருந்தால், மத்தியில் பாஜக ஆட்சி அமைய திமுக ஆதரவு கொடுக்கவும் வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.

மேலும், முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியா முழுவதும் ஆளுநர்களைக் கொண்டு மாநில அரசை பாஜக மிரட்டுகிறது எனவும், குஜராத் தேர்தல் வெற்றி, தேசிய அளவில் எதிரொலிக்காது எனவும் கூறியிருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த பேட்டி தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ளது. இதன் மூலம் 2024ஆம் ஆண்டு பாஜகவுடன் திமுக கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறப்படுகிறது. 2024-ல் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் திமுகவின் பங்கு இருக்கும் என்பதை முதலமைச்சர் இந்த பேட்டி உணர்த்துவதாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின்,"பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது" என்ற கருத்துக்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். டிவிட்டர் பக்கத்தில் அண்ணாமலை செய்த பதிவில்,"1967 ஆம் ஆண்டு, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது அதன் சொந்த பலத்தில் அல்ல. சுதந்திரா கட்சி மற்றும் சிபிஎம் கட்சிகளினுடனான கூட்டணியின் காரணமாகவே ஆட்சிக்கு வந்தது. 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் தனி பலத்தால் அல்ல. 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே.

1967லிருந்து, திமுக ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகப் பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டிருக்கிறது. இப்படி பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும், நீங்கள் படுமோசமான தோல்வியைச் சந்தித்த தேர்தல்களும் உண்டு மு.க.ஸ்டாலின் அவர்களே. யதார்த்தத்தை எதிர்கொள்ளுங்கள் மு.க.ஸ்டாலின் அவர்களே. துணைப் பிரதமராகும் உங்களின் லட்சியம் கலைந்து போய் நெடுங்காலம் ஆகிவிட்டது.

பிரதமர் மோடி தலைமையில், மீண்டும் பாஜக 2024 ஆண்டு தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறும். பாஜக கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில், அதை மீண்டும் செய்யத் தயங்காது. நான் உங்களுக்குச் சவால் விடுகிறேன் மு.க.ஸ்டாலின் அவர்களே. கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா?" எனச் சவால் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: பாமகவை விட்டால் தமிழக மக்களுக்கு வேறு வழியில்லை - அன்புமணி ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details