சென்னை : தமிழ்நாட்டில், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து, மண்டல வாரியாக கட்சியைப் பலப்படுத்தும் பணிகளை திமுக தொடங்கியுள்ளது.
அதற்காக சென்னையைத் தவிர்த்து தமிழ்நாட்டிலுள்ள பிற மாவட்டங்களை, மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு என நான்கு மண்டலங்களாகவும், சென்னைத் தனி மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டலங்களுக்கு கீழ் வரும் மாவட்ட செயலாளர்கள், நகர, பகுதி, ஒன்றிய மற்றும் பேரூர் செயலாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த அக்., 21 ஆம் தேதி மேற்கு மண்டல நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தது.
இந்நிலையில், இன்று (அக்.23) தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளுடன் காலையில் ஆலோசனை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் க.பொன்முடி, அ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கலைஞர் அரங்கில் உள்ள மேடையில் திரை அமைக்கப்பட்டு, நிர்வாகிகளிடம் படிவம் கொடுத்து தொகுதி வாரியான பிரச்சனைகளை பூர்த்தி செய்து கொடுக்க வலியுறுத்தபட்டது.
தொகுதியில் மக்கள் மன நிலை எவ்வாறு உள்ளது, உட்கட்சி பிரச்னை உள்ளிட்டவை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. தெற்கு மண்டலத்தை பொறுத்தவரை ஏறக்குறைய 58 க்கும் அதிகமான சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளது. அதில் திமுக எம்.எல்.ஏக்கள் 23 பேர் உள்ளனர். காலையில் பங்கேற்ற, 4 மாவட்டங்களிலுள்ள 29 சட்டப்பேரவைத் தொகுதியில் 13 தொகுதி திமுக வசம் உள்ளது.
இதேபோல் வரும் அக்., 27, 28 ஆகிய தேதிகளில், வடக்கு, கிழக்கு மண்டல நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மண்டல வாரியாக நிர்வாகிகளோடு நடைபெறும் கலந்துரையாடல் கூட்டம் முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க :விண்ணைத் தொட்ட வெங்காய விலை - குறைய இரண்டு மாதங்களாகலாம்!