சென்னை:"'கொக்கென்று நினைத்தாரோ: தமிழக ஆளுநர் ரவி' என்ற தலைப்பில் இன்று முரசொலியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில்,
“தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ரவி, சில நேரங்களில் தனது அதிகார எல்லை மீறி செயல்படத் தொடங்கியுள்ளாரோ என எண்ணிடத் தோன்றுகிறது!
இன்றைய தமிழக ஆளுநரான மேதகு ரவி, தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்பதற்கு முன் நாகாலாந்தின் ஆளுநராக பணியாற்றிய போது , நடந்து கொண்ட விவகாரங்கள் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகின! நாகாலாந்தின் தேசியவாத ஜனநாயக கட்சியின் தலைவர் சிங்வாங் கோன்யாக் ( Chingwang Konyak ) அங்கு ஆளுநராகப் பணியாற்றிய ரவி குறித்து கருத்து தெரிவிக்கையில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ”ஆளுநர் ரவியின் செயல்பாடு மகிழ்ச்சி தருவதாக இருந்ததில்லை.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் அவரது குறுக்கீடு அதிகமிருந்தது " - என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்..!.
நமது ஆளுநராக வந்துள்ள ரவியின் அத்துமீறல்கள், நாகாலாந்து அரசு நிர்வாகத்தின்மீது மட்டுமல்ல; அங்குள்ள ஊடகவியலாளர்கள் மீதும் இருந்துள்ளது ! நாகாலாந்து ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தமிழக ஆளுநராக அவர் நியமிக்கப்பட்ட நேரத்தில், ஆளுநர் ரவிக்கு அந்த அரசு சார்பில் ஒரு பிரிவு உபச்சாரக் கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது பத்திரிகையாளர்கள் ஒட்டுமொத்தமாக ஆளுநர் ரவிக்குத் தரப்பட்ட பிரிவு உபச்சார விழாவைப் புறக்கணித்துள்ளார்கள்! அந்தப் பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொள்ளுமாறு பத்திரிகையாளர்களுக்கு பல வேண்டுகோள்கள் வைத்தும், அவைகளை ஏற்க அவர்கள் முன்வரவில்லை; அந்த செய்தியாளர்களை அந்த அளவு தான் கவர்னராக நாகாலாந்தில் இருந்த காலத்தில் புண்படுத்தியுள்ளார் ரவி! இத்தகைய வரலாற்றுப் பின்னணிகளோடு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார் ரவி !.
தமிழ்நாடு,அரசியல் தெளிவுமிக்க பூமி
ஆளுநர் ரவி அரசியல்வாதியாக இருந்து , அரசியல் தட்ப வெப்பங்களை உணர்ந்து, அனுபவங்கள் பல பெற்று ஆளுநர் ஆனவரில்லை.அவர் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்து , ஓய்வுக்குப் பின் கவர்னராக அமர்த்தப்பட்டவர்! மிரட்டல் உருட்டல் பாணிகள் காவல் துறைக்குத் தேவை, பல நேரங்களில் அந்த பாணி கைகொடுக்கும். ஆனால் அது அரசியலில் எடுபடாது என்பதை அவர் உணர்ந்திட வேண்டும் !
குடியரசு தின விழாவை ஒட்டி ஆளுநர் ரவி விடுத்துள்ள செய்தி - அவர் தனது பொறுப்புணராது தமிழக மக்களின் தன் மானத்தை உரசிப்பார்க்க நினைப்பதாகவே தோன்றுகிறது!
’நீட்’-டுக்கு எதிராக தமிழகச் சட்ட மன்றம் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி மாதங்கள் சில கடந்தும் , அது கிடப்பிலே கிடக்கிறது ; அதன் நிலை என்ன என்று தெரியாத நிலையில், ‘ நீட் ’ வருவதற்கு முன் , இருந்த நிலையை விட ‘ நீட் ’ வந்தபின் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பு சேர்க்கை அதிகரித்துள்ளது - என்று கூறியிருக்கிறார் !
ஒட்டுமொத்தத் தமிழகமே நீட்டை எதிர்த்து நிற்கும் நிலையில் , தமிழகத்தின் சட்டப் பேரவையே அதனை எதிர்த்து ஒருமித்துத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள வேளையில் ; அதுவும் அவரது பரிசீலனையில் இருக்கும் கால கட்டத்தில் , ஒரு ஆளுநர் இப்படி அறிவிப்பது எந்த வகை நியாயம் ? மேதகு ஆளுநர் ரவியின் குடியரசு தினச் செய்தி இன்று ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
ஆளுநரின் கருத்துக்கு உரிய எதிர்ப்பை தமிழக தொழிற் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் ! மேதகு ரவி, ஆளுநர் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு , மற்ற இந்திய மாநிலங்களைப் போன்றது அல்ல என்பதை முதலில் அவர் உணர வேண்டும் ! இந்த மண், அரசியலில் புடம் போடப்பட்ட மண் ! இங்கே குக்கிராமங்களில் வசிப்பவர்கள் கூட அரசியல் தெளிவு மிகுந்தவர்கள்.
முரசொலியில் வெளியான கட்டுரை மாநில உரிமையை கருத்தில் கொள்ள வேண்டும்
ஆளுநர் ரவி எத்தகைய கருத்தையும், தெரிவிக்குமுன் தமிழகத்தைப் புரிந்து கொண்டு ,அதன் வரலாற்றைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு கூறுவது , அவரது பதவிக்குப் பெருமை சேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!.ஏறத்தாழ 7 கோடி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிய தீர்மானத்தின் மீது எந்தக் கருத்தும் தெரிவிக்காது - சட்டத்தின் சந்து பொந்துகளில் பதுங்கிக் கொண்டு இருப்பது எந்தவித நியாயம் என்பதை ஆளுநர் ரவி தெரிவிக்க வேண்டும் !.
ஒரு கட்சி தனது கொள்கைகளை சொல்லி, மக்களிடம் வாக்குப் பெற்று ஆட்சிப் பீடம் ஏறுகிறது ! மக்களும் அவர்கள் எண்ணத்தை அந்தக் கட்சி நிறைவேற்றும் என்று எண்ணி வாக்களிக்கிறார்கள் !. அந்த மக்களின் எதிர்பார்ப்பை தீர்மானமாக்கி அனுப்பும் போது , அதை ஒரு ஆளுநர் அலட்சியப்படுத்துவது என்பது , சுமார் 7 கோடி மக்களை அவமதிப்பது என்பதை உணர வேண்டும் ! .
தமிழகம், அரசியலில் பழுத்த பழங்களை ஆளுநராகக் கண்ட மாநிலம் ! ஸ்ரீபிரகாசா , உஜ்ஜல்சிங் , கே.கே.ஷா , பி.சி. அலெக்சாண்டர் , பர்னாலா , பட்வாரி , ச் சென்னா ரெட்டி , ரோசையா , புரோகித் என அரசியல்வாதிகளையும் , அதிகாரிகளையும் ஆளுநர்களாக பார்த்த மாநிலம் தமிழ்நாடு. அரசியல் சட்டம் அவர்களுக்கு அளித்த அதிகாரத்தை மதித்துப் புகழ் பெற்றவர்களும் , மிதித்து களங்கங்களாக விளங்கியவர்களும் உண்டு !
ஆளுநர் ஒன்றிய அரசின் பிரதிநிதி என்பதை ஏற்கிறோம். அவருடைய தலையாயக் கடமை , தான் பொறுப்பேற்றிருக்கும் மாநில மக்களின் ஒட்டுமொத்தக் கருத்தை ஒன்றியத்துக்குத் தெரிவித்து அவர்களுக்கு உண்மை நிலையை உணர்த்த வேண்டுமே தவிர, ஒன்றிய அரசின் முடிவை மக்கள் மீது திணிப்பது அல்ல.அதனை முதலில் தமிழக ஆளுநர் ரவி உணர வேண்டும்.
இது நாகாலாந்து அல்ல,தமிழகம்
தமிழக அரசியல்வாதிகள் பல கருத்துக்களில் ஒன்றுபடுவதில்லை.ஆனால் பல ஜீவாதார உரிமைகளில் அவர்கள் ஒன்று பட்டு நிற்பார்கள்.அங்கே கட்சி வேறுபாடு களைக் காண முடியாது , அப்படிப்பட்ட உரிமை களில் ஒன்றுதான் ' நீட் ' வேண்டாம் என்பது ! தமிழகத்தைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான் ; இதிலே ஆளும் கட்சிக்கும் , எதிர்க்கட்சிக்கும் மாறுபட்ட கருத்தில்லை.
பல பிரச்சினைகளில் , எதிரும் புதிருமாக இருந்தாலும்,தமிழகத்தின் சில பிரச்சினைகளில் ஒட்டுமொத்தத் தமிழகமும் ஒன்றிணைந்து நிற்கும்.அதிலே ஒன்று , இருமொழிக் கொள்கை ; மற்றொன்று ' நீட் ' வேண்டாமென்பது ! ஆளுநர் ரவி இதனை உணர்ந்து – உரிய தகவலை மேலிடத்துக்குத் தந்து - ஒட்டு மொத்தத் தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு அங்கீகாரம் வாங்கித் தர முயற்சி செய்ய வேண்டும்.
அதனை விடுத்து இங்கே ' பெரியண்ணன் ' மனப்பான்மையோடு அரசியல் செய்ய நினைத்தால் , " கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா." என்னும் பழங்கதை மொழியை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்; அதாவது, இது நாகாலாந்து அல்ல; தமிழகம் என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்..!” என்று கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இந்திய அளவில் பாஜக முதலிடம்!, தமிழகத்தில் அதிமுக முதலிடம்!- கட்சிகளின் சொத்து மதிப்பு என்ன?