தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான களப்பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். தேர்தலை கருத்தில்கொண்டு, கட்சி நிர்வாகிகளை மாற்றம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மாநிலத்தின் முக்கியக் கட்சிகள் ஈடுபட்டுவருகின்றன.
இதன் ஒருபகுதியாக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியச் செயலாளர் துரைராஜ் சரிவர கட்சிப்பணி செய்யாததால் கடந்த 19ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டு, சந்திரசேகரன் என்பவர் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் துரைராஜ் பதவி நீக்கத்தை கண்டித்தும், புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள சந்திரசேகரனை மாற்ற வலியுறுத்தியும் திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு ஒன்றியத்தில் இருந்து 50-க்கு மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டாக வந்து திமுக தலைவரைச் சந்திக்க முறையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் புகார் மனுவை அளித்துவிட்டுச் சென்றனர்.
திமுக உயர்நிலைச் செயல்திட்ட குழு ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென 50-க்கும் அதிகமான கட்சியினர் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை பார்ப்பதற்கு மனுக்களுடன் குவிந்தால் பரபரப்பு ஏற்பட்டது.