சென்னை ஐசிஎப் கான்ஸ்டபிள் சாலையில் உதவி ஆய்வாளர் முருகன், மூன்று காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக ஊரடங்கை மீறி, இருசக்கர வாகனத்தில் வந்த திமுக நிர்வாகி வாசுவின் வாகனத்தை நிறுத்தி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது வழிமறித்த காவலருடன் வாசு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர்,வாசு திமுக வட சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் மகேஷ், தமிழ்ச்செல்வன் ஆகியோரை உதவிக்கு அழைத்ததையடுத்து அங்கு வந்த அவர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது உதவி ஆய்வாளர் முருகனை ஆபாச வார்த்தையில் தமிழ்ச்செல்வன் திட்டியுள்ளார்.
மேலும், மூவரும் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை காவலர் அசோக் செல்போனில் வீடியோ எடுத்திருந்தபோது கோபமடைந்த தமிழ்ச்செல்வன் செல்போனைப் பறித்தார். இதனையடுத்து காவலர்கள் ஐசிஎப் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வடக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் மகேஷை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, பத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.