சென்னை: சென்னையில் டிபிசத்திரம் 16வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சம்பத்குமார் (48). நீர் கேன் போடும் தொழில் செய்து வந்தார். இவர் திமுகவில் 102வது வட்ட அவைத்தலைவராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 18) இரவு சம்பத்குமார் அண்ணாநகருக்கு வேலை நிமிர்த்தமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அண்ணாநகர் போகன் வில்லா பூங்கா அருகே சென்று கொண்டிருந்த போது, ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சம்பத்குமாரை வழிமறித்துள்ளது. பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சம்பத்குமாரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு, ஆட்டோவில் வந்த கும்பல் தப்பிச் சென்றது.
கொலை செய்யப்பட்ட சம்பத்குமார் முன்விரோதம் காரணமாக கொலை?
இதனைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.
சம்பத்குமார் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் தொடர்ந்து சம்பத் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் அண்ணாநகரில், திமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவால் கணவர் கொலை - மனைவி உள்பட மூவருக்கு ஆயுள் தண்டனை