சென்னை:சமீப காலமாக தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக ஆளுநர் ஆர்.என். ரவி பல்வேறு கல்லூரி சார்ந்த நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். இந்நிலையில் தேசிய கல்விக்கொள்கையை குறித்து தமிழ்நாட்டில் தினந்தோறும் பாடம் நடத்துகிறார் ஆளுநர் என்று தேசிய கல்விக்கொள்கையை கடுமையாக விமர்சித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.
அதில், " 'ஒன்றியக் கொள்கையைத் தாண்டிவிட்டது தமிழகம்' என்னும் தலைப்பில் முரசொலியில் வந்துள்ள தலையங்கத்தில், புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் கல்வித் தடையை ஏற்படுத்தும் ஒரு கொள்கையை ஒன்றிய அரசு வகுத்துள்ளது. அதனை அனைத்து மாநிலங்களையும் நோக்கி திணித்துக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களும் அந்தக் கொள்கைக்காகவே தன்னை நியமித்திருப்பதைப் போலத் தினமும் அதைப் பற்றியே பாடம் எடுத்துக்கொண்டு இருக்கிறார்.
ஒன்றிய அரசால் திணிக்கப்படும் புதிய கல்விக்கொள்கையால் ஏற்படும் பாதிப்புகளை நாட்டுக்குச் சொல்வதற்கான நல்ல வாய்ப்பை ஒரு வழக்கு ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக்கோரி, கடலூரைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வு முன் விசாரணையில் இருக்கிறது. இந்த அமர்வின் முன் தமிழ்நாடு தலைமைச்செயலாளர், உயர் கல்விச்செயலாளர், பள்ளிக்கல்விச்செயலாளர் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்கள். இந்த பதில் மனு அனைவருக்குமான பதிலாக அமைந்துள்ளது.
தேசிய அளவில் சராசரி மாணவர் சேர்க்கை விகிதத்தை 27.1 விழுக்காட்டில் இருந்து 2035ஆம் ஆண்டில் 50 விழுக்காடாக உயர்த்தும் எண்ணத்தில் தேசிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டதாகக் கூறும் நிலையில், தற்போதே தமிழ்நாட்டில் சராசரி மாணவர் சேர்க்கை 51.4 விழுக்காடாக உள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு 15 ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிக்கிறது. மொத்தமுள்ள 38 மாநிலங்களில் 18 மாநிலங்கள் 27.1 என்ற விழுக்காட்டைவிட குறைவாகத்தான் கல்வி வளர்ச்சி பெற்றுள்ளது.
சராசரி மதிப்பை விட கூடுதலாகப் பெற்றுள்ள தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தமிழ்நாடு மக்களுக்குத் தவறு இழைப்பதாகவும், எதிர்வினை ஆற்றுவதாகவும் அமைந்து விடும். தேசிய கல்விக் கொள்கையின்படி 5 ஆண்டுகள், பின்னர் மூன்று ஆண்டுகள், அதன் பின்னர் மூன்று ஆண்டுகள், அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் (5+3+3+4) என கல்வி முறை அமல் படுத்தப்பட்டால் ஏற்கனவே உள்ள கல்விமுறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும்.
தேசிய கல்விக்கொள்கையின்படி மூன்று வயதில் சேர வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டால் அதற்கு மேற்பட்ட வயதினர் பள்ளியில் சேரமுடியாத நிலை ஏற்படும். மழலையர் பள்ளி வகுப்புகள் இல்லாமலேயே 5 அல்லது 6 வயதில் பள்ளியில் சேரும் வாய்ப்பு தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட மாணவர்களைப்பாதிக்கும் வகையில் புதிய கல்விக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இலவச கல்வி, மதிய உணவு, இலவசப் புத்தகம், இலவச சீருடை, இலவச மிதிவண்டி, இலவசக் காலணி, இலவச லேப்டாப், கல்வி உதவித் தொகை, இலவசப் பேருந்துப் பயணம் ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இடைநிற்றல் என்பது இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.