சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும் எனவும், திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி வாக்குறுதி எண் 117-ஐ நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலக் கூட்டமைப்பு சார்பில் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற புகழேந்தி கூறும்பொழுது, 'அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணி இடங்களை மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு நிரப்பிட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் மறு நியமன போட்டித்தேர்வு என்ற அரசாணை 149ஐ ரத்து செய்திட வேண்டும்.
கடந்த 2021 சட்டப்பேரவைத்தேர்தலில் திமுக செயற்குழு அறிக்கையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த தேர்தல் வாக்குறுதி வரிசையில் 117ன் படி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அரசு ஆசிரியர் பணி வழங்க வேண்டும். அவ்வாறு பணி நியமனம் வழங்கும்போது ஆசிரியர்களின் வயதைக் கருத்தில் கொண்டு தற்பொழுது உள்ள வயதை வரம்பைத் தளர்வு செய்ய வேண்டும்.
திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பணி வழங்குக - ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் வென்றவர்கள் உண்ணாவிரதப்போராட்டம் ஏற்கெனவே பல்வேறு முறை நாங்கள் போராட்டங்களை நடத்தி உள்ளோம். ஆனால், எங்களை அழைத்து இதுவரை கோரிக்கையை நிறைவேற்றவில்லை. எங்கள் கோரிக்கையை குறித்த தகவல் முதலமைச்சர் கவனத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கொண்டு செல்லவில்லை. முதலமைச்சரின் கவனத்திற்குக்கொண்டு சென்று, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்களில் 2,42,122 தீர்மானங்கள் நிறைவேற்றம்