சென்னை:திமுக முப்பெரும் விழா, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கரோனா நோய்த்தொற்றுக் காரணமாக திமுகவின் முப்பெரும் விழா, காணொலி காட்சி மூலமாக மாவட்ட வாரியாக நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் காணொலி மூலம் விழாவில் பங்கேற்றனர்.
முப்பெரும் விழாவையொட்டி, பெரியார் விருது மிசா மதிவாணன், அண்ணா விருது தேனி எல். மூக்கையா, கலைஞர் விருது- கும்மிடிப்பூண்டி வேணு, பாவேந்தர் விருது- வாசுகி ரமணன், பேராசிரியர் விருது- முபாரக் ஆகியோருக்கு வழங்கி திமுக தலைவர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது, " 72 ஆண்டு காலமாக தொடர்ந்து நாட்டிற்கு பாடுபட்டு வரும் திராவிட கழகத்தின் முப்பெரும் விழா நடைபெறுகிறது. கரோனா காலம் என்பதால் காணொலி காட்சி மூலமாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு முப்பெரும் விழாவில் 8 மாதங்கள் பொறுத்திருங்கள் நாம் ஆட்சிக்கு வருவோம் என்று சொன்னேன். அதேபோல் ஆட்சி மாற்றம் நடந்து, திமுக 6ஆவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளது. இது தொண்டர்களின் உழைப்பால் மட்டுமே இந்த வெற்றி கிடைத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் 100 விழுக்காடு வெற்றி பெற வேண்டும்.
பெரியார் என்றால் சமூகநீதி, அண்ணா என்றால் மாநில உரிமை, கருணாநிதி என்றால் ஒடுக்கப்பட்டோர் உரிமை, பாவேந்தர் என்றால் மொழிப்பற்று, பேராசிரியர் என்றால் இனமானம். இதுதான் இந்த இயக்கத்தின் கொள்கை இதனை கடைப்பிடித்துதான் நாம் நடந்து கொண்டிருக்கிறோம்" என்றார்.