தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தயாநிதி மாறன், டி.ஆர். பாலு மீதான வழக்கில் சட்ட நடவடிக்கையை நிறுத்திவைக்க உத்தரவு!

சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட நடவடிக்கையை நிறுத்தி வைக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HC
HC

By

Published : May 23, 2020, 5:12 PM IST

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாநிதிமாறன், டி.ஆர். பாலு ஆகியோர் திமுகவின் ’ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களைத் தலைமைச் செயலர் சண்முகத்தைச் சந்தித்து வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், தலைமைச் செயலர் தங்களை மூன்றாம்தர மக்கள் போல் நடத்தினார் எனவும், தாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா? எனவும் கூறியிருந்தனர்.

இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசியுள்ளதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த சேகர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் தயாநிதிமாறன், டி.ஆர். பாலு உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கின் மேல் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், டி.ஆர். பாலு ஆகியோரது தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழி வாங்கும் நோக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரளித்தவரும் அனுமன் சேனா அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால், அரசியல் உள்நோக்கத்துடன் புகார் அளித்துள்ளார்.

’ஒன்றிணைவோம் வா’ திட்டத்தில் பெறப்பட்ட லட்சக்கணக்கான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமைச் செயலரைச் சந்தித்தோம். ஆனால் அவரோ எங்கள் கோரிக்கைகள் மீது மதிப்பளிக்கவும் இல்லை. எங்களை முறையாக நடத்தவும் இல்லை. அதனால் சபாநாயகரை சந்தித்து முறையிட்டோம். தலைமைச் செயலரின் அறிவுறுத்தலின்படியே எங்கள் மீது இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.

காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளதால் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கோவையில் பதிவான வழக்கில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்றும் காவல் துறை எந்தவித கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: சைமன் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த வழக்கு: 12 பேருக்கு நிபந்தனை பிணை!

ABOUT THE AUTHOR

...view details