தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க குரல் எழுப்புவோம்” - திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்! - DMK MPs meeting in Chennai

DMK MP's Meeting: அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்பிக்கள் கூட்டத்தில், தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டத்தில் குரல் எழுப்புவோம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க குரல் எழுப்புவோம்
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க குரல் எழுப்புவோம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 6:17 PM IST

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று (செப்.16) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

சமீபத்தில் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. எதிர்கட்சிகள், பிரதமர் நரேந்திர மோடி மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் கொண்டு வந்திருந்தனர். இந்நிலையில், நாளை மறுநாள் (செப்.18) தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா உள்ளிட்ட சில மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

எனவே, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் திமுக எம்பிக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும், மசோதாக்கள் மீது எவ்வாறு பதிலளித்து பேச வேண்டும் என்பது குறித்து எம்பிக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

அதில் காவிரியில் இருந்து கர்நாடகா அரசு தண்ணீர் தர மறுக்கும் நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாகவும், தமிழக ஆளுநர் விவகாரம் தொடர்பாக பிரச்னைகளை எழுப்பவும், சனாதனம் குறித்து சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையான நிலையில், நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பாஜக உறுப்பினர்கள் குரல் எழுப்பும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது.

மேலும் இன்று (செப்.16) நடைபெற்ற திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் பின்வருமாறு, “காவிரி நதிநீர் பிரச்னையில் நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளை பொருட்படுத்தாமல், மழை குறைபாட்டைக் காரணம் காட்டி, தமிழ்நாட்டின் பங்கான நீரை கர்நாடக மாநிலம் விடுவிக்காததால் குறுவைப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பா பயிரும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை உடனடியாக விடுவிக்குமாறு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்திட வேண்டும் என கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டிற்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை முடக்கி வைத்திருப்பதுபோல், இரண்டாவது கட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிக்கான நிதி ஒதுக்கீட்டையும் செய்யவில்லை. முதலமைச்சர் - பிரதமரின் முதல் சந்திப்பிலேயே வலியுறுத்தியும், இன்றுவரை மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்காமல் இழுத்தடித்து, தமிழ்நாட்டு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு தடைக்கல்லை ஏற்படுத்தி வருகிறது.

பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வால், தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றமே நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க மசோதாவை இரண்டு முறை ஒருமனதாக நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த பிறகும், மத்திய அரசு அந்த மசோதாவிற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமலேயே இருப்பது பாஜக ஆட்சி தமிழ்நாட்டிற்கு செய்து வரும் மாபெரும் துரோகம். நீட் தேர்வு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதலை அளித்திட, தொடர்ந்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்பும்.

பெண்ணுரிமை வழங்குவதில் தலைசிறந்த மாநிலமாக மட்டுமின்றி, “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை” அண்ணா பிறந்தநாளன்று செயல்படுத்தியுள்ள சூழலில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதா பற்றி வாயே திறக்காமல் காலத்தைக் கழித்துள்ளது மத்திய பாஜக அரசு.

கருணாநிதியும், இன்று அவர் வழியில் செயல்படும் முதலமைச்சரும் மகளிர் மசோதாவை நிறைவேற்றக் கோரி எண்ணற்ற முறை கோரிக்கைகள் வைத்தும், அதன் மீதான விவாதத்திற்கு கூட பாஜக அரசு தயாராக இல்லை. எனவே, இந்த சிறப்புக் கூட்டத்தில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33 விழுக்காடு மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்ப இக்கூட்டம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவிற்கே முன்னோடியாக சமூக நீதிக்கான குரல் எழுப்பும் நமது இயக்கம், இச்சிறப்பு கூட்டத்தொடரில், “மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசின் துறைகளில் முழு ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்”, “அரசுத் துறைகளில் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்”, “தனியார் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்திட வேண்டும்”, “பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள கிரீமிலேயரை 25 லட்சமாக உயர்த்த வேண்டும்”, “உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளோடு “இட ஒதுக்கீட்டிற்கு உள்ள 50 விழுக்காடு உச்சவரம்பு நீக்கப்படும்” மசோதாவையும், இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்திலேயே கொண்டு வந்து நிறைவேற்ற வலியுறுத்துவோம்.

மத்திய பாஜக அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட “விஸ்வகர்மா யோஜனா” திட்டம், குலத் தொழிலை ஊக்குவிக்கும் வகையிலான நடைமுறைகளை வகுத்து, அதிலும் குறிப்பாக 18 வயது நிறைந்துள்ளவர்களை கல்லூரிக்குச் செல்ல விடாமல், பரம்பரை தொழிலையே செய்யத் தூண்டும் குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி. இத்திட்டத்தையும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள்.

எங்கள் ஆட்சிக் காலத்தில் நாட்டையே மாற்றுவோம் என பேசி வந்த மத்திய பாஜக அரசு, தற்போது “இந்தியா” கூட்டணிக்கு அஞ்சி “பாரத்” என்று நாட்டின் பெயர் மாற்றுவதிலேயே உன்னிப்பாக இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், முற்றிலும் தோல்வியுற்ற மத்திய பாஜக அரசை, நாடாளுமன்றத்தில் “இந்தியா” கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து எதிர்கொண்டு இந்திய ஜனநாயகத்தை காத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

மேலும், எம்பிக்கள் கூட்டத்தின் நிறைவிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்பி சிவா, “அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடனும் மத்திய ஜல்சக்தி அமைச்சரை சந்திக்கவுள்ளோம். எந்தவித அரசியல் பாகுபாடும் கிடையாது. அனைத்துக்கட்சி உறுப்பினர்களுடன் சந்திப்போம்.

இந்த விவாகரத்தில் எந்த விருப்பு வெறுப்புமின்றி, அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக, அதிமுகவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரல் தெரியவில்லை. நாளை நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தெரியப்படுத்தலாம் என எதிர்பார்க்கிறோம்” என அவர் கூறினார்.

இதையும் படிங்க:சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை! என்ன நடக்கிறது?

ABOUT THE AUTHOR

...view details