சென்னை:தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களைக் கடந்த டிச.4ஆம் தேதி புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் (MICHAUNG) டிச.5ஆம் தேதி ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே கரையைக் கடந்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பாதிப்பு என்பது அதிகமாக இருந்தது. இதில் வெள்ளத்தால் தலைநகர் சென்னை மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
குறிப்பாகப் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர். இதனைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரண தொகை வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நிவாரண தொகை வழங்குவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.