டெல்லி :நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாவதத்தில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர். பாலு, திருக்குறள் திருவள்ளுவர் குறித்து உலக நாடுகளில் பேசும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு உரியதை இதுவரை செய்யவில்லை என்று கூறினார்.
பெரும்பான்மை அரசு நாடாளுமன்றத்திற்கும், எதிர்க்கட்சிகளுக்கும் நல்லது அல்ல என்றும்; இருப்பினும் பிரதமர் மோடியை அவைக்கு வரவழைக்கவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் என்றும் டி.ஆர். பாலு தெரிவித்தார். வாக்குறுதி கொடுக்கப்பட்டு அடிக்கல் நாட்டு விழா நடந்து 5 ஆண்டுகள் கடந்தும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ஒரு செங்கல் கூட எழுப்பப்படவில்லை என்று கூறினார்.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை வாய்திறக்க வைக்க நம்பிக்கையில்லா தீர்மானம் என்றும், நாட்டு மக்களுக்கு 15 லட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்த பிரதமர் மோடி ஒரு ரூபாய் கூட தரவில்லை என்றார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தருவதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும்; 5 கோடி வேலைவாய்ப்புகள் ஒழிக்கப்பட்டு உள்ளதாக டி.ஆர். பாலு தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 80 டாலருக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படும் நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மீதான விலை விண்ணை முட்டும் அளவுக்கு மத்திய அரசு கொண்டு சென்று உள்ளதாக டி.ஆர். பாலு எம்.பி. தெரிவித்தார். இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது.
இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மணிப்பூரில் காணப்படும் வன்முறைச் சம்பவங்கள், இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி வாய்திறக்கவில்லை என்று டி.ஆர். பாலு எம்.பி தெரிவித்தார்.