தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலக்கரி நிறுவனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு: டி.ஆர். பாலு கண்டனம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், தமிழ்நாட்டு இளைஞர்களை புறக்கணித்து விட்டு, வட மாநிலத்தவர்களை தேர்வு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும் என மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

dmk mp tr balu  dmk mp tr balu statement  tr balu statement about Neyveli Coal Company  Neyveli Coal Company  திமுக எம்பி டிஆர் பாலு  நிலக்கரி நிறுவனத்தில் தமிழர்கள் புரக்கணிப்பு  நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்  நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு திமுக எம்பி கண்டனம்
dmk mp tr balu

By

Published : Jul 31, 2022, 7:40 AM IST

திமுக பொருளாளரும், திமுக மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர். பாலு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக நேற்று (ஜூலை 30) விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் நூறு விழுக்காடு பட்டதாரிப் பொறியாளர்கள் இடங்களுக்கும், தமிழ்நாட்டு இளைஞர்களைத் திட்டமிட்டே தவிர்த்து விட்டு, வட இந்திய பொறியாளர்களை மட்டுமே தேர்வு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்.

தனியார்மயமாக்கல் தடுக்கப்பட்டது: அரை நூற்றாண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக, அப்பகுதியின் 30 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது வாழ்வாதாரமாக விளங்கிய நிலங்களை வழங்கினர். அதன் அடிப்படையில் அப்பகுதி மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் கடந்த 2010ஆம் ஆண்டுவரை 80 விழுக்காடு பணி வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. அதுவும் பெருமளவு ஒப்பந்தப் பணியாளர்களாக மட்டுமே தமிழர்களுக்கான வேலை வாய்ப்பை என்.எல்.சி. நிறுவனம் வழங்கி வந்தது. படிப்படியாக அதுவும் குறைக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், என்.எல்.சியின் பெருமளவு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை, முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். இதன்மூலம், நாட்டின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி. நிறுவனத்தைத் தனியார் நிறுவனமாக்கும் முயற்சி அப்போது தடுத்து நிறுத்தப்பட்டது.

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதா?: என்.எல்.சி நிறுவனம் தனியார்மயமாகி விடக்கூடாது என்பதில் திமுக அப்போதும், இப்போதும், எப்போதும் உறுதியாக இருக்கிறது. இந்நிலையில், பட்டதாரிப் பொறியாளர்களுக்கான இடங்களை நிரப்ப, வடமாநிலங்களைச் சேர்ந்த 299 பேரை தேர்வு செய்து, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு நடைபெறும் என என்.எல்.சி நிறுவனம் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயலாக உள்ளது.

ஏற்கனவே, தங்கள் சொந்த நிலங்களை என்.எல்.சி நிறுவனத்திற்காக தாரை வார்த்துவிட்டு, அதில் தங்கள் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பாவது கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு எத்தனை பெரிய பேரிடி இது?.

பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்: என்.எல்.சி நிறுவனத்தின் நிரந்தரப் பணியிடங்களில் 90 விழுக்காடு அளவு வட இந்தியர்களுக்கே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 100 விழுக்காடு பணிவாய்ப்பும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டிருப்பது பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. என்.எல்.சி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் திட்டமிட்டு துரோகம் இழைக்கும் கொடிய செயலாகும்.

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில், தமிழர்களுக்கே வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில், கருணாநிதியை போலவே, முதலமைச்சர் ஸ்டாலினும் உறுதியுடன் உள்ளார். ஏற்கனவே, கடந்த மே 5ஆம் தேதி அன்று, என்.எல்.சி நிறுவனத்திற்கான பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர்கள் தேர்வில், என்.எல்.சி நிறுவன சுரங்கப்பணிகளுக்கு நிலத்தை வழங்கிய உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திட்டமிட்டே தட்டிப்பறிக்கும் செயல்: மேலும், கேட் (GATE) நுழைவுத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுப்பது, அத்தேர்வை எழுதாத தமிழ்நாடு இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் செயலாகும் என்பதையும் முதலமைச்சர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். அதற்குப் பின்னரும், தமிழர்களுக்கான வேலைவாய்ப்பை அடியோடு பிடுங்கி எறியும் செயல்பாட்டில் என்.எல்.சி நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டில், தமிழர்கள் தாரை வார்த்த நிலத்தில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் நிறுவனத்தில், தமிழர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. குறிப்பிட்ட மாநிலத்திற்கு தன்னியல்பாகக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பை, ஒன்றிய அரசின் நிறுவனம் திட்டமிட்டே தட்டிப் பறிப்பது கூட்டாட்சி தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும்.

எனவே, தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 299 பட்டதாரி பொறியாளர்களுக்கும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற இருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வை என்.எல்.சி நிர்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். என்.எல்.சி நிறுவனத்தின் நூறு விழுக்காடு பணிவாய்ப்புகளும் தமிழர்களுக்கே வழங்கப்படும் வகையில், பணிநியமனத்திற்கான தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:”இந்தியாவில் ஒற்றை மொழி தேசிய மொழியாக முடியாது” முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details