சென்னை:தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "பிரதமர் ஒரு இடத்திற்கு வருகிறார் என்றால் மத்திய அரசுதான் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும். அமித்ஷாவிற்கும், அண்ணாமலைக்கும் ஏதும் பிரச்சனையா என தெரியவில்லை. அதனால் தான் பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி என்று கேள்வியை எழுப்புகிறாரா என தோன்றுகிறது. பிரதமர் வருகிறார் என்றால் டெல்லியில் இருந்து அதிகாரிகள் வந்து தான் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள். அவர்களை தாண்டி தமிழக காவல்துறையால் எதையும் செய்ய முடியாது. பாதுகாப்பு பணிகள் சரியில்லை என்றால் அதனை மாற்றி சரி செய்து கொடுப்பார்கள். எனவே அண்ணாமலை மத்திய அரசை தான் குற்றம் சாட்டுகிறாரே தவிர தமிழ்நாடு அரசை குற்றம் சாட்டுவதாக கருதவில்லை.
காசி தமிழ் சங்கம் அல்ல சங்கமம். சங்கம் என்றால் காசியில் தமிழ் வளர்க்க வேண்டும். ஒரு காலத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு யாத்திரை சென்றவர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கும், கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கும் அதிகமாக சென்று வருகிறார்கள், தவிர காசிக்கு அதிகம் செல்லவில்லை. எதையாவது ஒன்றை செய்து தமிழர்கள் மீது அக்கறை உள்ளதாக காட்டுகிறார்கள்.
ஆளுநர் திட்டமிட்டு செயல்படுகிறார், அவசர சட்டம் என்பது ஆளுநரே கையொப்பமிட்டு நிறைவேற்றப்படாத அரசு சட்டம். அவரே பிறப்பித்த ஒரு சட்டத்தை சட்டமன்றம் இயற்றி முன் வைத்துள்ள நிலையில் அதை அவரே அவமதித்துள்ளாரா என்ற எண்ணம் வருகிறது. அரசமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதனாலேயே ஆளுநர் மாற்றம் குறித்து நாம் வலியுறுத்தி உள்ளோம். குற்றங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்கிறோம். அது செய்திகளில் வருவதால் குற்றங்கள் நிகழ்கிறது என்பதை பார்த்து தான் எடப்பாடி பழனிச்சாமி தெரிந்துக் கொள்கிறார்.” என்று கூறினார்.