தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆர்.எஸ். பாரதிக்கு நிபந்தனை ஜாமின்: கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு - dmk rs bharathi

சென்னை: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதிக்கு பிணை வழங்கி சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dmk MP
Dmk MP

By

Published : Jun 1, 2020, 5:39 PM IST

Updated : Jun 1, 2020, 8:09 PM IST

பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி கலைஞர் வாசகர் வட்டம் சார்பில், நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட ஆர்.எஸ். பாரதி, பட்டியலினத்தவருக்கு எதிராகப் பேசியதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவியது. இது தொடர்பாக, ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மத்திய குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஆர்.எஸ். பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மே 23ஆம் தேதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு, மே 31ஆம் தேதி வரை இடைக்கால முன்பிணை வழங்கிய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஜூன் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்பிணையை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதேசமயம், நீதிமன்றத்தில் ஆஜராகும் தினத்தில் தனக்கு பிணை வழங்க உத்தரவிடக்கோரி ஆர்.எஸ்.பாரதியும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார், வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால பிணை ரத்து செய்ய மறுத்து, மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஜூன் 1ஆம் தேதி சரணடையும் ஆர்.எஸ். பாரதியின் பிணை மனுவை அன்றைய தினமே பரிசீலிக்க வேண்டும் எனவும் அமர்வு நீதிமன்றத்துக்கு நீதிபதி நிர்மல்குமார் உத்தரவிட்டார்.

இதன்படி, ஆர்.எஸ்.பாரதி இன்று காலை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் முன்பு ஆஜரானார். பின்னர், அவர் தாக்கல் செய்த பிணை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆர்.எஸ். பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், வில்சன், என்.ஆர். இளங்கோ ஆகியோர் வாதிட்டனர்.

அரசுத்தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் வாதங்களை முன் வைத்தார். பாரதிக்கு பிணை வழங்கக்கூடாது என புகார்தாரரான கல்யாணசுந்தரம், ஏர்போர்ட் மூர்த்தி ஆகியோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார், மத்திய குற்றப்பிரிவு காவல் துறை விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதியைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

Last Updated : Jun 1, 2020, 8:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details