சென்னை:முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, 2015 ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஏழு ஆண்டு விசாரணைக்குப்பின் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் சில நிறுவனங்கள் மீது கடந்த மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக, 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ தெரிவித்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நீதிபதி டி.சிவகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.