தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2019-20ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர், மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றதால், மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. தொடர்ந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஜூலை 30ஆம் தேதி வரை சுமார் ஒருமாதம் காலம் நடக்கிறது.
இக்கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது குறித்து ஆலோசிப்பதற்காக அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் நடக்கிறது. இதில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.