தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்கவிருக்கிறார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் தேர்தலில் வென்று முதல்முறை எம்.எல்.ஏவாக கோட்டைக்குள் நுழைகிறார். இதனையொட்டி அவர் பல்வேறு தரப்பினருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
இப்படிப்பட்டச் சுழலில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்தை இன்று உதய் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜயகாந்த் நடிகராகவும், நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்தபோதே திமுகவின் அப்போதைய தலைவர் கருணாநிதியின் தீவிர அபிமானியாக இருந்தார். நடிகர் சங்கம் சார்பில் கருணாநிதியின் திரைத்துறையில் பொன்விழா ஆண்டு விழாவில் தங்கப்பேனாவையும் அவருக்குப் பரிசளித்தார்.
முக்கியமாக விஜயகாந்த் திருமணத்திற்குத் தலைமை தாங்கி அதை நடத்தி வைத்ததும் கருணாநிதியே.
விஜயகாந்த்தை விஜி என்று யாரேனும் அழைத்தால் , அவர் விஜயகாந்த்தின் மனதுக்குள்ளும், அவரின் மனதுக்குள் விஜயகாந்த்தும் இருக்கிறார்கள் என்று அர்த்தம். கலைஞர் கருணாநிதியும் விஜயகாந்த்தை விஜி என்றே அழைத்ததன் மூலம் அவர்களுக்குள் இருந்த நெருக்கத்தை தெரிந்துகொள்ளலாம்.
நீண்ட நாட்களாக அரசியல் எண்ணத்தில் இருந்த விஜயகாந்த்துக்கு,கோயம்பேடு மேம்பால விரிவாக்கத்துக்காக அவரது திருமண மண்டபத்தை கையகப்படுத்த இருப்பதாகத் தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து நோட்டீஸ் பறந்தது. அப்போது மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலு இருந்தார். இதனால் மேலும் கொதிப்படைந்த விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு தேமுதிகவை தொடங்கினார்.
காலம் செல்லச்செல்ல கோபம் தணிந்து திமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி அமைப்பார் என்று உடன்பிறப்புகள் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, அவரோ 2011ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவுடன் கைகோர்த்து அறிவாலயத்துக்கு அதிர்ச்சி கொடுத்தார். அந்தத் தேர்தலில் தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது.
அதற்கடுத்த தேர்தலில் (2016) திமுகவுடன், தேமுதிக கைகோர்க்கும் என்றே கருதப்பட்டது. கருணாநிதியும், தேமுதிகவுடனான கூட்டணி குறித்து “பழம் நழுவி பாலில் விழும்” என்று கூறினார். இதன் மூலம், நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் அறிவாலயத்துடன் கை கோர்க்கப்போகிறார் என்று இரண்டு கட்சிக்காரர்களும் உற்சாகமடைய, அவரோ மக்கள் நல கூட்டணிக்குத் தலைமை வகித்து, அடுத்த அதிர்ச்சியை அளித்தார்.
தற்போது நடந்து முடிந்த தேர்தல் கூட்டணி நிலவரத்திலும், அதிமுக தேமுதிகவை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருக்க அக்கட்சியின் அடுத்த நிலைப்பாடு என்னவாக இருக்கும். ஒருவேளை திமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் இருக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது.
இப்படி கட்சி ஆரம்பித்து நான்கு தேர்தல்களைச் சந்தித்தும் இதுவரை திமுகவுடன் தேமுதிக எந்தத் தேர்தலிலும் கூட்டணி வைக்காவிட்டாலும் விஜயகாந்த்தை உதயநிதி சந்தித்தது விஜயகாந்த் மேல் திமுகவினருக்கு எப்போதுமே உறவு பார்வை இருப்பதையே உணர்த்துகிறது.
அதுமட்டுமின்றி, முதல்முறை எம்.எல்.ஏவாக ஆகியிருக்கும் உதயநிதி, விஜயகாந்த்தை சந்தித்ததன் மூலம் திமுகவுடன் காலாவதியாகிப்போன விஜியின் உறவை மீட்டெடுக்க ஒரு வாய்ப்பாகவும் இது அமையலாம்.
இருந்தாலும் அரசியலில் அரங்கேறப்போகும் காட்சிகளை முன்னரே கணிக்க முடியாது என்பதால், இந்த சந்திப்பை மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே தற்போது எடுத்துக்கொள்ளலாம்.