சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், இன்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோரிடம் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதற்கிடையே, உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்ற உதயநிதி, அங்கு தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவிடத்திலும் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக மெரினாவில் அமைந்துள்ள மறைந்த திமுகவின் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களிலும், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட சிந்தாரிப்பேட்டையில் சிங்காரச் சென்னை 2.0 வாழ்க்கை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாற்றுப்பண்ணை திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாடு முழுவதும் இளைஞர் அணி சார்பில் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். எனது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
இதனைத் தொடர்ந்து சிந்தாதிரிப்பேட்டையில் மருத்துவ முகாமையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள், அளிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார். இதேபோன்று திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள வி.ஆர்.பிள்ளை தெருவில் சமுதாய நலக்கூடத்தில் இலவசமருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.