தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறப்பு நீதிமன்ற விசாரணைக்குத் தடை கோரி செந்தில் பாலாஜி மேல்முறையீடு! - திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி

சென்னை : போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்த வழக்கில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜியை விடுவிக்க மறுத்த, சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.

Dmk mla Senthil balaji appeal against special court order, petition filed
Dmk mla Senthil balaji appeal against special court order, petition filed

By

Published : Sep 6, 2020, 8:03 PM IST

கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தற்போதைய திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இரண்டு கோடியே 80 லட்சம் ரூபாய் வரை பெற்று பலரிடம் மோசடி செய்ததாக மத்தியக் குற்றபிரிவு காவல் துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும், மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர், சென்னை, கரூர், திருவண்ணாமலை, கும்பகோணம் என செந்தில் பாலாஜிக்கு சொந்தமான அவரது வீடு, அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது மோசடி நடைபெற்ற காலகட்டத்தில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள், தங்க நகைகளின் ரசீதுகள், ஆபரணங்கள், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் பெற்ற சுய விபரக் குறிப்புகள், நேர்காணலுக்கான அழைப்புக் கடிதங்கள், அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பெற்ற பணம் குறித்த விவரங்களின் பட்டியல் கைப்பற்றப்பட்டதாக மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால், எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.

மேலும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை, கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ”மோசடி நடைபெற்றதாகக் கூறப்படும் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2015 ஜனவரி மாதம் வரையிலான காலக்கட்டத்தில், அமைச்சர் என்ற வகையில் நான் மிகவும் வேலைப்பளுவோடு இருந்தேன். அந்த சமயத்தில் மனுதாரர்கள் என்னை சந்தித்து அரசு வேலை வாங்கித் தர பணம் கொடுத்ததாக வைக்கப்படும் குற்றச்சாட்டு நம்பத்தகுந்தவை அல்ல.

என் மீதான குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அவை திரிக்கப்பட்டவை. மனுதாரர் உள்நோக்கத்தோடு என் மீது புகார் அளித்துள்ளார்.

பல்வேறு மாவட்டங்களில் இதே போன்ற குற்றச்சாட்டுகளில் என் மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு காவல் துறையினர் சார்பில் பதிவு செய்யப்பட்ட இதே போன்றதொரு வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது” எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரித்து முடிக்கும் வரை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details