கிருஷ்ணகிரி மாவட்டம் மாரண்டபள்ளியில் உள்ள நிலம் தொடர்பாக நாகராஜ், திம்மராயன் ஆகியோர் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. வெவ்வேறு சமுதாயங்களை சேர்ந்த இருவருக்கும் இடையேயான இந்த விவகாரத்தில், சுமுக தீர்வு காண்பதற்காக கிருஷ்ணகிரி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனை அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளனர்.
அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், நிலத் தகராறு விவகாரத்தில் தொடர்புடைய பட்டியலினத்தை சேர்ந்தவரை அவரது சாதிப்பெயரை சொல்லி செங்குட்டுவன் திட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.
இந்நிலையில், மக்கள் பிரதிநிதியாக இருக்கக்கூடிய செங்குட்டுவனின் செயல்பாடு குறித்தும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்க கோரி அப்பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சந்திரசேகர் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஓசூர் ஹட்கோ காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் டிசம்பர் 4ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.