சென்னை:ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி கடனில் மோசடி செய்த திமுக பிரமுகர் உள்பட இருவரை ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பிரேம நாதன் என்பவரின் வீட்டில் ஜூன் 23ஆம் தேதி சோதனை நடத்தினர்.
பிரேம நாதன் தொடர்பான அழைப்புகளை ஆய்வு செய்து பார்க்கும்போது, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த திமுக பகுதி பொருளாளரான பிரேம் ராஜா என்பவரிடம் அடிக்கடி பேசியது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவரது வீட்டிலும் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக பெரம்பூரைச் சேர்ந்த பிரேம நாதனை ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, சேப்பாக்கத்தைச் சேர்ந்த பிரேம் ராஜா என்பவர் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்க்கு தப்பிச் செல்வதாக தகவல் தெரிய வந்ததை அடுத்து, ஜிஎஸ்டி அதிகாரிகள் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து பிரேம் ராஜாவை கைது செய்தனர்.
கோடிக்கணக்கில் மோசடி:இருவரிடமும் முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் 59 கம்பெனிகளுக்கு 973.64 கோடி ரூபாய்க்கான உள்ளீட்டு வரி கடன் 175.88 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. நிறுவனங்களுக்கு ஏற்ப போலியாக ஆவணங்களை உருவாக்கி அதன் மூலம் போலியான ITC எனப்படும் உள்ளீட்டு வரிக் கடன் ஆவணத்தை தயாரித்து இந்த கும்பல் மோசடி செய்தது அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.
போலி ஆவணங்கள்:நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டு சிம்கார்டுகள் மற்றும் மென்பொருட்கள், செல்போன்கள் ஆகியவை மூலமாக போலி ரசீதுகளுக்கான பரிவர்த்தனைகளை மேற்கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த போலி உள்ளீட்டு வரிக் கடன் ஆவணங்களை தயாரிப்பதற்காக குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு கடன் வாங்கித் தருவதாக கூறி அவர்களுடைய பான் மற்றும் ஆதார் ஆவணங்களை மோசடியாக பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
இது போன்று போலி ஆவணங்களைப் பயன்படுத்தி போலியாக நிறுவனங்களை உருவாக்கி, அந்த நிறுவனங்கள் பொருட்களை சப்ளை செய்தது போன்ற ஆவணங்களையும் இந்த மோசடி கும்பல் தயாரித்துள்ளது. அவ்வாறு பொருட்களை சப்ளை செய்தபோது உள்ளீட்டு வரிக் கடனை செலுத்தியதாகவும் ஆவணங்களை தயாரித்து மோசடி செய்துள்ளது.
தொழில்நுட்பங்களின் உதவி:இருப்பினும் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த மோசடியை அரங்கேற்ற பயன்படுத்தப்பட்ட கணினியின் ஐபி முகவரி மற்றும் விசாரணையில் கிடைக்கப் பெற்ற தகவல்களில் முக்கிய நபர்களின் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் பல்வேறு ஆதாரங்களை மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். குறிப்பாக, இந்த மோசடி கும்பல் தரகர்களுடன் பேசிய வாட்ஸ் அப் சாட்டுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.