சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டப்பேரவை உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஈபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களை அவையில் இருந்து வெளியேறுமாறு சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இதனையடுத்து ஈபிஎஸ் உள்பட அவரது தரப்பு எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “பேரவையில் இன்று சபாநாயகர் நடந்து கொண்ட முறை அதிமுகவிற்கு எதிரானது. அதிமுகவை எதிர்கொள்ள முடியாத திமுக தலைவர், கொல்லைப்புறமாக சபாநாயகர் மூலம் அதிமுகவிற்கு எதிராக செயல்படுகிறார்.
திமுகவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்படும் நிலையில், அவருக்கு ஆதரவாக இன்று திமுக செயல்படுவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குழுவில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பும் சபாநாயகர் பார்வைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அந்த தீர்ப்புக்கு மாறாகவே செயல்படுகிறார். மகாராஷ்டிராவில் முதலமைச்சராக இருக்கக்கூடிய ஏக்நாத் ஷிண்டேக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவின் அடிப்படையில் அவர் ஏற்கப்பட்டுள்ளார். அதேபோல் 62 அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி மற்றும் சட்டப்பேரவையில் பிற பதவிகள் மாற்றம் செய்யப்பட்டு, நாங்கள் அளித்த கோரிக்கைகள் சபாநாயகர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
திமுக, சபாநாயகர் மூலம் அதிமுகவை பழிவாங்குகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஆணையம், ஜெயலலிதா மரணம் குறித்த ஆணையம் என இதனை அமைத்தது நாங்கள்தான். எனவே நாங்கள் அதனை பார்த்து பயப்படவில்லை. மக்கள் மத்தியில் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயரை போக்கும் வகையில், திமுக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளது.