தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அன்பழகன் படத்திற்கு ஸ்டாலின் மலர் தூவி மரியாதை - மலர்தூவி அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்

சென்னை: மறைந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் படத்திற்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மு க ஸ்டாலின்
மு க ஸ்டாலின்

By

Published : Jun 10, 2020, 8:59 PM IST

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் ஜுன் 2ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வார காலமாக அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று ( ஜூன் 10) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெ. அன்பழகன் படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், ஜெ. அன்பழகன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெ. அன்பழகன், சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். சிறந்த களப்பணியாளர். என் மீது பற்று கொண்டவர். அரசியலைக் கடந்து என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் மீது மதிப்பு கொண்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திமுகவினருக்கும் ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மாறாத மந்தகாசப் புன்னகையோடு, மாற்றாரையும் ஈர்க்கின்ற அன்பு தவழும் புன்சிரிப்போடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று இயக்கத்திற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட்டு, கட்சியின் புகழ் ஓங்குவதற்கான பணியில் தன்னை ஈடுபடுத்தியவாறு உயிர் நீத்ததன் மூலம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தியாக வரலாற்றில் அழியாத புகழ் இடத்தைப் பெற்றுவிட்டார் அன்பழகன்.

இந்தக் கொடுந்துயரைத் தாங்க முடியாமல் தி.மு.கழகத் தலைவர் தவிக்கின்றார். அவருக்கும், அன்பழகனின் குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்றக் கழகக் கண்மணிகளுக்கும் ஆறுதல் தேறுதல் கூற முடியாது என்ற நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details