சென்னை:தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து திமுக பல்வேறு தனது இளைஞரணி, மகளிரணி, தொழில்நுட்ப அனி என அனைத்து பிரிவுகளையும் பலப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றது. குறிப்பாக, திமுக தகவல் நுட்ப அணி, மக்கள் தொடர்பு துறையை பலப்படுத்த பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன்படி தமிழ்நாட்டை மேம்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் 20 லட்சம் பேரின் கருத்துக்களை அறியவும், அவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கவும் அவர்களுக்கு கடிதம் அனுப்பும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த முன்னெடுப்பின்படி, திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கடிதம் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மக்களை தொடர்பு கொண்டு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான அவர்களது கருத்துகளை வெளிப்படுத்த அழைப்பு விடுத்துவருகிறார். மேலும் மக்கள் தங்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை சமூக வலைத்தளம், தொலைபேசி, குறுஞ்செய்தி, வாட்ஸ்ஆப் மூலம் பகிரும் வண்ணம் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொண்டர்கள் பகிர்ந்த கடிதங்கள் மேலும், இத்திட்டத்தின் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களுடன் மெய்நிகர் கூட்டங்களில் கலந்துரையாடுவார். அவருடன் தொடர்ந்து பணியாற்ற ஆர்வமுள்ள மக்கள் கொண்ட பிரத்யேக அணியும் அமைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் 'விடியும் வா' முன்னெடுப்பு மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று வரை ஒரு லட்சம் கடிதங்கள் அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. ஸ்டாலினிடம் இருந்து கிடைத்த கடிதங்களை தொண்டர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.