இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அச்சம் தருவதாகவும், அதிர்ச்சியூட்டுவதாகவும் பீதியை ஏற்படுத்துவதாகவும் மாறிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் தினந்தோறும் செய்யப்படும் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கையைத் தமிழ்நாடுஅரசு வெளியிடுகிறது. இதனை மொத்த எண்ணிக்கையாக மட்டுமில்லாமல், மாவட்ட வாரியாக எவ்வளவு பேருக்கு அன்றைய தினம் பரிசோதனை செய்யப்பட்டது என்பதையும் அரசு விளக்கமாக வெளியிட வேண்டும்.
ஆரம்பத்தில் கரோனா நோய்த் தொற்று இல்லை என்று சொல்லப்பட்ட மாவட்டங்களில் இப்போது பரவி வருவதாக எண்ணிக்கைகள் காட்டுகின்றன என்றால், எப்படிப் பரவியது? அல்லது, பல மாவட்டங்களில் அப்போது பரிசோதனையே செய்யாமல் இப்போது செய்வதால் வெளியில் தெரிய வருகிறதா? என்பதையும் அரசு விளக்க வேண்டும். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை அரசு அறிவிக்கும் போதெல்லாம், 'எவ்வளவு பேருக்குப் பரிசோதனை செய்தீர்கள்?' என்ற கேள்வியை நான் எழுப்பி வந்தேன்.
எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதனை முன்கூட்டியே எடுங்கள், முன்கூட்டியே மக்களுக்கு அறிவியுங்கள் என்பதையும் சொல்லி வந்தேன். மார்ச் 24ஆம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்திலும், பெருங்களத்தூர், தாம்பரம் நிலையங்களிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியதும், ஏப்ரல் 25ஆம் தேதி கோயம்பேடு காய்கறி அங்காடியில் பல்லாயிரக்கணக்கானோர் கூடியதும், அரசாங்கத்தின் திட்டமிடுதலிலும் செயலாக்கத்திலும் இருந்த மெத்தனமும் அலட்சியமுமே தவிர, மக்களைக் குறை சொல்ல முடியுமா?
இன்றைக்கு 'கோயம்பேடு' மீது முழுப் பழியையும் போடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 25ஆம் தேதியன்று பல்லாயிரக்கணக்கில் கூடியதும், தினமும் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மொத்த மற்றும் சிறுவியாபாரிகளை தனிமனித இடைவெளி இல்லாமல் கூட விட்டதும்தான் அரசாங்கம் செயல்படும் அழகா? சென்னை மாநகரத்தில் காவல்துறை ஆணையரகம் இருக்கிறதா? அல்லது அதுவும் மூடி சீல் வைக்கப்பட்டு விட்டதா?