வாக்குறுதியை காப்பாற்ற வேண்டியது முதலமைச்சரின் தார்மீகப் பொறுப்பு - ஸ்டாலின்! - ஸ்டாலின் அறிக்கை
சென்னை: கரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் முன்களவீரர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிதி உதவி செய்ய வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் முன்களவீரர்களின் குடும்பத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி ரூ.50 லட்சம் நிதியுதவியும், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவச் செலவுக்கு ரூ.2லட்சம் ஆகியவற்றை முதலமைச்சர் அவர்கள் உடனடியாக வழங்கிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு பகல் பாராமல் 24 மணிநேரமும் இடைவேளையின்றி, தங்களின் உயிரைப் பணயம் வைத்து, கரோனா நோய்த் தடுப்புப் பணியில் தியாக உணர்வுடன் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள், கரோனா நோய்த் தொற்றால் மரணம் அடைந்தால் 25 லட்சம் ரூபாய் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும்” என்று அதிமுக அரசு முடிவு எடுத்திருப்பது சிறிதும் பொருத்தமற்றது என்பதுடன் மிகுந்த கண்டனத்திற்கும் உரியது.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இறக்கும் முன்களப் பணியாளர்களுக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்” என்று முதலில் அறிவித்த முதலமைச்சர், பிறகு இப்படி உயிரிழப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் மத்திய அரசு அறிவித்திருப்பதை மேற்கோள் காட்டி, “மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை முன்களப் பணியாளர்களுக்கும் 10 லட்சத்திற்குப் பதில் 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும், இறந்தவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும்” என, ஏப்ரல் 22 ஆம் தேதி அறிவித்தார்.
கரோனா நோய்ச் சிகிச்சைப் பணியில் தொற்றுக் குள்ளாகி குணமடைந்து இதுவரை வீடு திரும்பியவர்களுக்கு மருத்துவச் செலவுக்காக முதலமைச்சர் உறுதியளித்த 2 லட்சம் ரூபாய் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது? நோய்த் தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட 50 லட்சம் ரூபாயும், அரசு வேலையும் எத்தனை பேருக்கு அளிக்கப்பட்டது? என்று எந்த தகவல்களையும் வெளியிடாமல், அந்தத் தகவல்களை எல்லாம் இரும்புத் திரை போட்டு பொது மக்களிடமிருந்து மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு.
முன்களப் பணியாளர்களுக்கு வாக்குறுதி கொடுத்தவர் முதலமைச்சர். அந்த வாக்குறுதியைத் தவறாமல் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பும் தனக்கே இருக்கிறது என்பதை முதலமைச்சர் நிச்சயம் நினைவில் கொள்ள வேண்டும். மனமும், மனதில் இரக்கமும் இருந்தால் மார்க்கம் உண்டு என தெரிவித்துள்ளார்.