கரோனா நோய் தடுப்புப் பணிகளில் தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படவேண்டும் என்றும் ஊரடங்கு உத்தரவை விரைந்து நீட்டித்து அறிவிக்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சருக்கு பழனிசாமிக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதற்கு முதலமைச்சர் பழனிசாமி, 'ஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியலை செய்கிறார்' என மிகக் கடுமையாக விமர்சித்து பதில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் பழனிசாமிக்கு பதில் அளிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் சென்று, மனிதக் குலமே நடுங்கி நிற்கும் கரோனா பேரிடரிலிருந்து தமிழ்நாட்டு மக்களை மீட்க பொறுப்புள்ள முதலமைச்சராக, கடமை உணர்வுடன் செயல்பட பழனிசாமி முன்வர வேண்டும். அரசாங்கம் ஒழுங்காக முறையாக, மக்களுக்காகச் செயல்பட வேண்டும். இல்லையென்றால் அரசாங்கத்தை திமுக செயல்பட வைக்கும்.
யாருடைய ஆலோசனையும் எனக்குத் தேவையில்லை. எல்லாம் எனக்குத் தெரியும், தானே எல்லாம் என்ற முற்றிய தன்முனைப்பு நிலைக்கு அவர் வந்துவிட்டதைதான் அவரது பதில் அறிக்கை காட்டுகிறது. முதலமைச்சர் தன்னை சுயபரிசோதனை (Self Introspection) செய்துகொள்ள வேண்டும். அல்லது கண்ணாடி முன் நின்று சற்று பின்னோக்கிப் பார்த்து யோசிக்க வேண்டும். கூவத்தூர் முதல் கோட்டைவரை இவரது சந்தர்ப்பவாதத்தைப் பார்த்து, இவரது கட்சியினரே இவருடைய முதுகுக்குப் பின்னால் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.