தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மொழிப்போராட்டத்திற்கான களம் அமைத்திட வேண்டாம்" -  மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை: தமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமிழ்நாட்டில் மாபெரும் மொழிப்போராட்டத்திற்கான களத்தினை அமைத்திட வேண்டாம் என்று ரயில்வே வாரியத்தை எச்சரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

dmk-leader-stalin-statement-about-railway-exam

By

Published : Sep 6, 2019, 11:29 PM IST

ரயில்வே தேர்வினை மாநில மொழிகளில் நடத்த வேண்டுமா? என்று தெற்கு மத்திய ரயில்வே எழுப்பிய கேள்விக்கு, மாநில மொழிகளில் கேள்வித்தாள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று கடந்த மாதம் 21ஆம் தேதி ரயில்வே வாரியம் பதிலளித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இதனைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

  • மத்திய அரசு நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் 'துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை (General Departmental Competitive Examination), தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை' என்றும், 'ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும்' என்றும், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளம் போல, ரயில்வே வாரியம் அறிவித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • நூறு சதவிகிதம் 'அப்ஜெக்டிவ்' கேள்விகள் அடங்கிய இந்தத் தேர்வினை மாநில மொழிகளில் நடத்த வேண்டுமா என்று தெற்கு மத்திய ரயில்வே எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ள ரயில்வே வாரியம், 'இந்தத் தேர்வின் கேள்வித்தாள்கள் மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என்று எந்த உரிமையும் கோர முடியாது' என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இருக்கிறது.
  • கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில உரிமைகளையும் பா.ஜ.க. ஆட்சியில் ரயில்வே வாரியம் போன்ற அமைப்புகளும் உரிய முறையில் மதிக்கத் தவறுவது, இந்திய அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களுக்கு மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது. ரயில்வே துறையில் இந்தி மொழி கற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழி தெரிந்தவர்களை படிப்படியாகக் குறைக்கும் சதித் திட்டமாகவே இதை திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.
  • இந்தியை வளர்க்க வேண்டும் என்பதற்காக, தமிழ்மொழிக்குத் துரோகம் செய்யும் ரயில்வே வாரியத்தின் இந்த பாரபட்சமான நடவடிக்கையை திராவிட முன்னேற்றக் கழகத்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே, தபால்துறை தேர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தும். அதேவேளையில், ரயில்வேயில் நடைபெறும் 'துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வுகள்' (GDCE) அனைத்துமே தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்றும், 'குரூப் சி பதவிகளுக்கான தேர்வினை ஆங்கிலத்தில் எழுத விருப்பம் தெரிவித்தவர்கள் இந்தியில் பதில் எழுதினால் அளிக்கப்படும் மதிப்பெண் சலுகை', தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் 'குரூப் சி' தேர்வு எழுதுவோருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
  • தமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் தொடர்ந்து வேண்டுமென்றே வம்படியாக ஈடுபட்டு, தமிழ்நாட்டில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களம் ஒன்றை மீண்டும் அமைத்திட வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்க விரும்புகிறேன் என தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்

ABOUT THE AUTHOR

...view details